முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகள் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். எனக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்து பேஸ்மேக்கர் வைத்திருப்பதால் தறியில் அமர்ந்து நெசவு வேலை செய்ய முடியவில்லை.

என் மகள் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். எனக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்து பேஸ்மேக்கர் வைத்திருப்பதால் தறியில் அமர்ந்து நெசவு வேலை செய்ய முடியவில்லை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

என் மகள் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்று அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். எனக்கு இதயத்தில் ஆபரேஷன் செய்து பேஸ்மேக்கர் வைத்திருப்பதால் தறியில் அமர்ந்து நெசவு வேலை செய்ய முடியவில்லை. இதனால் என் மகள் நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்து கொண்டு வருகிற பணத்திலும், ஆடு மேய்ப்பதன் மூலம் வரும் வருமானத்திலும் குடும்பம் ஓடுகிறது. என் மகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?  

வாசகர், சென்னிமலை. 

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரம் இரண்டாம் பாதம். தைரிய ஸ்தானாதிபதியான மூன்றாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். 
மூன்றாம் வீட்டிற்கு சிறப்பானதொரு வலிமை உண்டானால் வீரதீர பராக்கிரமங்கள் கூடும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். 
எதிரிகள் விலகிப் போவார்கள். உடன்பிறந்தோருடன் கருத்து ஒற்றுமை ஓங்கும். தங்கள் கருத்துக்களை வெளியிடுவதில் தனித் திறமை உண்டாகும். 
அதோடு மூன்றாம் வீடு உபஜெய (வெற்றிக்கு உதவும்) வீடுகளில் முதலாவதாகும். ஒரு வீட்டின் அதிபதி அந்த வீட்டைப் பார்த்தால் அந்த வீட்டின் பலம் கூடும். "பாவத் பாவம்' என்ற அடிப்படையிலும் சந்திர பகவானுக்கு பலம் கூடுகிறது. 
லக்னம், ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிர பகவான் லக்னத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) வர்கோத்தமம் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தையும் பெற்று வலுவாக அமர்ந்திருக்கிறார். 
சுக்கிர பகவான் யோக காரகராவதால் துணி வியாபாரம் செய்யலாம். பேன்சி பொருள்கள், பெண்கள் பயன்படுத்தும் ஆடை அணிகலன்கள், கலைப் பொருள்கள், கைவினைப் பொருகள் ஆகியவற்றின் மூலம் ஆதாயம் பெற முடியும். அதோடு நகைத்தொழில் (தங்கம், வெள்ளி, கவரிங் நகைகள்), சிமெண்ட், பெயிண்ட், இரும்பு கம்பிகள், பெட்ரோலியம் ஆயில், வாகன உதிரி பாகங்கள், மருந்துக் கடை, கால்நடைத் தீவன மொத்த வியாபாரம் ஆகிய துறைகளும் ஏற்றதாக அமையும். 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
"மறைந்த புதன்! நிறைந்த மதி! நிறைந்த நிதி!' என்கிற ஜோதிட வழக்கின்படி, உங்களது மகள் ஆங்கில இலக்கிய பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, போட்டித் தேர்வுகளுக்கும் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
புத பகவான் வலுத்திருப்பவர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அதோடு பொது அறிவு, புத்திசாலித்தனம், எழுத்துத் திறமை, தர்க்கவாதம் போன்றவற்றிலும் வெற்றியைக் கொடுப்பார். சுகாதி
பதியான சூரிய பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். 
சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதும் சிறப்பாகும். இதனால் சொந்த வீடு, வாகனம் ஆகியவை அமையும். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். 
களத்திர ஸ்தானாதிபதி ராசியிலும், நவாம்சத்திலும் பலம் பெற்றிருப்பதால் மண வாழ்க்கை சிறப்பாக அமையும். அதோடு களத்திர ஸ்தானத்திற்கு ஐந்தாம் வீட்டில் இருப்பதும் அவருக்கு பலத்தைக் கூட்டுகிற அமைப்பாகும். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் எட்டாம் வீட்டிலேயே சுக்கிர பகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) மூலத்திரிகோணம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை அயன சயன மோட்ச ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் புத பகவானின் மீதும், ஏழாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் மீதும் (தன காரகர் தன ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்), ஒன்பதாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் படிகிறது. 
பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
தர்மகர்மாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது (சனி பகவானுக்கு லாப ஸ்தானம் சாலச்சிறந்தது) சிறப்பாகும். ராகு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் (கன்னியா ராகு) சந்திர பகவானின் சாரத்தில் (அஸ்தம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
கேது பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். 
அவருக்கு தற்சமயம் ராகு பகவானின் தசையில் சுக்கிர பகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இது மூன்று வருடங்கள் நடக்கும். இதை "பொற்காலம்' என்று கூறலாம். அவருக்கு அரசு வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். உங்களுக்கும் வருமானம் கூடத் தொடங்கும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.