நமது வாழ்வுப் பாதை நூல்களாகவும் நீண்டு செல்வது. கடந்து வந்த காலம் இடம் தவிர்த்து பிடித்த நூல் பற்றிச் சொல்வது எனக்கு சாத்தியமில்லை. போரில் எழுந்து நாடு தவறி அகதியான நிலையில் எனக்கு இடம் அதிக அர்த்தமுள்ளது. ஒருகால இடத்தில் எனக்குப் பிடித்த நூல்கள் வேறு ஒரு கால இடத்தில் நினைக்கவே லாயக்கற்று போய்விடுகிறது.
’பொன்னியின் செல்வனி’ல் இருந்து ’கரித்துண்டு’ வரை அத்தகைய நூல்களின் பட்டியல் பெரியது. முன்னர் நாடு அமைதியிலும், நான் பதின்ம வயதிலும் இருந்தபோது தேசிய விநாயகம் பிள்ளை மொழிபெயர்த்த ’உமர் கையா’மின் ’ரூபியாத்’ கிடைத்தது. பின்னர் வெறி போல ’ரூபியாத்’தின் சகல தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் தேடித் தேடி வாசித்தேன். இன்று ’ரூபியாத்’ பற்றிய நினைப்பு தேய்ந்து போய்விட்டது.
பின்னர் மெல்ல மெல்ல குலைந்தது. முதலில் சாதி, ஒடுக்குதல் பின்னர் இன ஒடுக்குதல் எனத் தொடர்ந்த ஒடுக்குதல்களுக்கு எதிரான மக்கள் எழுச்சிகளால் ஆகர்சிக்கப்பட்டபோது எனது இலக்கிய நாட்டமும் மாறியது. அந்த நாள்களில் கார்க்கியின் தாயில் இருந்து, தகழியின் ’செம்மீன்’ வரைக்குமான பல ருசியான மலையாள, வங்க இலக்கிய மொழிபெயர்ப்புகளில் மனம் ஈடுபட்டது. தொடர்ந்து மாக்சிம் கார்க்கியின் குறுநாவல்கள், புஸ்கினின் ஜிப்ஸிகள், ஐமத்தாவின் ’அன்னை வயல்’, ஹெமிங்வேயின் ’கடலும் கிழவனும்’ பல இலத்தீன் அமெரிக்க நாவல்கள் என மனசிலாகியது.
எனினும் ஒரு தடவைக்கு மேல் வாசித்தவை மிகக்குறைவு. செயின்றெஞ்சுபரியின் குட்டி இளவரசன், ஐமத்தாவின் அன்னை வயல், குப்ரிக்கின் ‘செம்மணி வளையல்’, பாரதி பாடல்கள், சங்க இலக்கியங்கள் மட்டுமே என்னை மீண்டும் முழுமையாக வாசிக்க வைத்த இலக்கியங்கள் எனலாம்.
எனினும் புலியூர்க்கேசிகன் அழகு படுத்திய உரையில் ’புறநானூற்’றை வாசித்த பதின்ம வயது தொட்டு மீண்டும் மீண்டும் வாசிக்கிற காமம் எனக்கு சங்க இலக்கியங்களில் தான் நிகழ்கிறது. சங்க இலக்கியங்களே அக, புற தேடல்களுக்கான பறக்கும் மந்திரக் கம்பளம். அவைதான் எனது புலன்களில் எங்கோ இந்த கவிதையின் மாய கதவைத் திறந்துவிட்டது.
சங்க இலக்கியங்களை ஒவ்வொரு தடவையும் படிக்கிறபோது மணற்கேணி புதிய பறவைகள் வந்து கூடுகிற வேடந்தாங்கல் ஆகிவிடுகிறது. அந்த ஒவ்வொரு தடவையும் புற அகநானூறு களை முதன் முதலில் வாசித்த 16 வயசு களை மீண்டும் வாழ முடிகிறது. இப்படித்தான் நான் இளமையடைகிறேன்.
அண்மையில் ஒரு இன்ப விபத்து. இசை விழாவில் இடம்பெற்ற அலர்மேல் வள்ளியின் நிகழ்ச்சியில் அரங்கத்தில் சங்க கவிதை ஒன்று உயிர்த்தெழுந்து வாழ்ந்தபோது நெக்குருகி போனேன். சில நாட்களின் பின்னர் கலைக்கல்லூரியில் நிகழ்ந்த புத்தக அரங்கில் நடிகர் சிவகுமார் சங்க கவிதைகள் சிலவற்றை மனப்பாடமாக சொன்னதைக் கேட்டபோது மகிழ்ந்தேன். அதற்குள் ’தினமணி கதிர்’ மூலம் இளைய தலைமுறைக்கு இவற்றை சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமை இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.