முகப்பு
பிரபலங்கள் - புத்தகங்கள்

'மருத்துவர்கள் சந்தித்த வித்தியாசமான நோயாளிகள்': ஆரோக்கிய வாழ்விற்கு! - நடிகர் ராஜேஷ்

மனிதன் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ வேண்டும் என்பதற்காகவே உருவானது தான் ’மருத்துவர்கள் சந்தித்த வித்தியாசமான நோயாளிகள்’ என்னும் நூல். இதுவே என்னைக் கவர்ந்த புத்தகம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
நடிகர் ராஜேஷ்
பகிர்:

உயிர்கள் அனைத்திலும் மனித உயிரே மகத்தானது. அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளும், விஞ்ஞான வளர்ச்சியும் மனித குலத்தை வாழ்விக்கப் பெரிதும் துணை செய்கின்றன. எந்த மூளையால் மனிதன் முன்னுக்கு வந்தானோ, அந்த மூளையின் கண்டுபிடிப்புகளே அந்த மூளைக்கும் மனிதனுக்கும் தடையாகவும், எதிரியாகவும் இருக்கின்றன.

பிணி, மூப்பு, சாக்காடு இந்த மூன்றும் மனித வாழ்வின் மூன்று நிலைகள். இது தவிர்க்க முடியாதது. பிணியைத் தள்ளிப் போடலாம். மூப்பை வெளியே தெரியாத அளவிற்கு வைத்திருக்கலாம். ஆனால் சாக்காடு என்னும் சாவிலிருந்து மனிதன் தப்பிக்கவோ, தள்ளிப்போடவோ முடியாது. இதில் முக்கியமானது பிணியைத் தடுப்பது என்பதுதான்.

எந்த ஒரு செயலையும் மனிதன் பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றுக்காகச் செய்கிறான். ஆனால் அவன் தேடுவது அமைதியையும் அன்பையும்தான். எது இருந்தாலும் நோயில்லாமல் இருந்தால்தான் அதை அனுபவிக்க முடியும், எனவே நம் முன்னோர்கள், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்றனர்.

Advertisement

மனிதக் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் மருத்துவம். ஒரு காலத்தில் காடுகளில் வாழ்ந்த மக்கள் அபூர்வ மூலிகைகளின் தன்மை அறியாமலேயே அவற்றை பயன்படுத்தி வந்தனர். காலத்தால் அதன் பெருமையும் சிறப்பும் ஆராயப்பட்டு மருத்துவம் என்ற விஞ்ஞான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தத் துறையின் வளர்ச்சி பிரமிக்கும் வகையில் உள்ளது.

இதனால் மனித குலம் அடைந்து வரும் நன்மைகள் ஏராளம். மனிதன் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ வேண்டும் என்பதற்காகவே உருவானது தான் ’மருத்துவர்கள் சந்தித்த வித்தியாசமான நோயாளிகள்’ என்னும் நூல். இதுவே என்னைக் கவர்ந்த புத்தகம்.

நூலின் ஆசிரியர்: கவிதா ஆல்பர்ட்.

மனித உடலில் ஏற்படுகின்ற அனைத்து விதமான நோய்கள், அவை ஏற்படுவதற்கான காரணம், வாராமல் பாதுகாக்கும் வழிமுறை, வந்தால் அதற்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறை போன்ற பயனுள்ள விஷயங்களைத் தொகுத்து அளித்துள்ளார்.

நோய் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் அதிகமாக உணவு உண்பது, உண்ணாமல் இருப்பது, சரியான வேளையில் உண்ணாமல் இருப்பது, சத்தான உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் மன உளைச்சல், சுற்றுப்புற சுகாதாரமின்மை, வேலைப்பளு போன்றவை தான் முக்கியமான காரணங்கள் என்பதை இப்புத்தகத்தில் சிறப்பாக விளக்கி உள்ளார். ஆனால் அவரவர் விருப்பு வெறுப்புகளுக்குத் தகுந்த முறையில் சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. என்னதான் வேறுபாடு காணப்பட்டாலும் நோய்க்குச் சிகிச்சை என்பதுதான் அடிப்படைத் தத்துவம். எது நல்லது, எது கெட்டது, எது நம் உடலுக்கும், வசதிக்கும், பொருளாதாரத்துக்கும் ஒத்துப் போகிறதோ அதை நம்முடைய அறிவுதான் முடிவு செய்ய வேண்டும்.

எனவே அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் இந்நூலில் அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி, வர்மா போன்ற பல்துறை மருத்துவ விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புத்தகம் ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கும் பேருதவியாக இருக்கும். அனுபவமும், திறமையும் மிக்க மருத்துவ நிபுணர்களைத் தேர்வு செய்துள்ளதே இதற்குச் சான்றாகும்.

குறிப்பாக இதயம், கல்லீரல், கணையம், காது, மூக்கு, தொண்டை, கண்கள், தலைவலி, விபரீத விபத்துகளுக்கு ஒட்டறுவைச் சிகிச்சை முறை, புற்றுநோய், தோல் வியாதி, எய்ட்ஸ் போன்றவற்றைப் பற்றி நன்றாக எழுதியுள்ளனர். இந்தப் புத்தகத்தை வெறும் மருத்துவக் குறிப்பாக இல்லாமல் பல்வேறு விஷயங்களைச் சுவைப்படச் சேர்த்து மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments