முகப்பு
பிரபலங்கள் - புத்தகங்கள்

'கவியரசர் என் காவலர்': இது ட்ரெய்லர்! -இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

கவிஞரைப் பற்றி வெளிவந்த ’கவியரசர் என் காவலர்’ என்ற நூலை அய்யா நெடுமாறன் எழுதி வெளியிட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
'கவியரசர் என் காவலர்'/ எஸ்.பி.முத்துராமன்
பகிர்:

நான் பள்ளிப் படிப்பை முடித்ததும் கவியரசு கண்ணதாசன் ஆரம்பித்த ’தென்றல்’ இதழில் பணியாற்ற சென்னைக்கு வந்து, அவர் இல்லத்தில் தங்கியிருந்து ’தென்ற’லில் பணியாற்றினேன். ’குருகுல வாசம்’. ’கன்னிப் பணி’ சுமார் இரண்டு ஆண்டுகள் கவிஞரோடு இருந்தபோது அவரது ஒவ்வோர் அசைவுகளையும் நான் அறிவேன்.

கவிஞரைப் பற்றி அண்மையில் வெளிவந்த ’கவியரசர் என் காவலர்’ (தமிழ் முழக்கம் பதிப்பகம், வடபழனி) என்ற நூலை அய்யா நெடுமாறன் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் தன் சுவையான எழுத்துகளால் அழகான தமிழ் நடையில் கவிஞரைப் பற்றி ஆழமாகப் பதித்திருக்கிறார். இதனைப் படிக்கும்போது கவிஞரோடு வாழ்ந்த காலங்கள் நினைவுகளாக மனதில் காட்சி தரும்.

இந்த நூல் நட்புக்கு இலக்கணமாக அமைந்திருக்கிறது. அரசியல் இயக்கங்களில் வேறுபட்டாலும், கொள்கைகளில் எதிரும்புதிராக இருந்தாலும் ’நட்பாக’ இருக்க முடியும் என்பதற்கு அந்த நூல் சாட்சி.

Advertisement

இன்றைய அரசியல்வாதிகளும், பொதுத்தொண்டில் ஈடுபட்டுள்ளோரும் படிக்க வேண்டிய பாட நூல். உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் அணிந்துரையில் எழுதியுள்ளதைப்போல இந்நூல் தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்டகால வரலாறு.

‘அட்லாஸ்’ என்ற புத்தகத்தை அன்று நெடுமாறனுக்குக் கவிஞர் கொடுத்தார். இன்று மீண்டும் ஓர் அட்லாஸ் புத்தகம். கவிஞர் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டிய செய்திகளை இதில் தந்துள்ளார். அதேபோல் இன்னொரு முக்கியமான செய்தியும் இடம் பெற்றுள்ளது. இந்திய – பாகிஸ்தான் போர் நடந்தபோது காமராஜர் வந்து கவிஞர்களிடம், போர் வீரர்களை உற்சாகப்படுத்த ஒரு கலை நிகழ்ச்சி நடத்துங்கள் என்றார். அதன்படி கவிஞர் திரைப்படக்காரர்களை அழைத்துக் கொண்டு பஞ்சாப் எல்லையில் நாடுகாக்கும் பணியில் இருந்த தமிழ்நாட்டு வீரர்களுக்கு கலை நிகழ்ச்சி நடத்தினார்.

சிவாஜி, சந்திரபாபு, பத்மினி, சாவித்ரி, ஜெயலலிதா, எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி என்று திரைப்பட்டாளமே சென்று கலை நிகழ்ச்சி நடத்தி உற்சாகமூட்டியது. சினிமாக்காரர்கள் நாட்டுக்கு செய்த சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தச் சம்பவம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

இப்படிப் பல செய்திகளைச் சொல்லலாம், நான் ரசித்த செய்திகளையெல்லாம் எழுதிவிட்டால் நீங்கள் இந்த நூலை விலை கொடுத்து வாங்கிப்படிக்க மாட்டீர்கள், விலை ஒன்றும் அதிகமில்லை. எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் விலை நிர்ணயிக்கட்டுள்ளது.

பாதுகாக்கப்பட வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. நான் குறிப்பிட்டிருப்பது சினிமாவின் ட்ரெய்லர் போல. முழு விவரத்தையும் அறிய நூலை வாங்கிப் படித்தால் உங்களுக்குப் பலன் உள்ளதாக இருக்கும்.

          ( தினமணி கதிரில் 21.10.2001 அன்று வெளிவந்தது) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments