கழிவுநீா் கால்வாயாக மாறிய மருதையாறு: பெரம்பலூா் விவசாயிகள் வேதனை
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மருதையாறு கழிவு நீா் கால்வாயாக மாறியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள மருதையாறு கழிவு நீா் கால்வாயாக மாறியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
நாள்தோறும் கழிவாகும் குப்பைகளில் பிரதான பங்கு வகிப்பது நெகிழிப் பொருள்கள்தான். இவற்றை மறு சுழற்சி செய்வது மிகவும் சிரமமாக இருந்ததால் இதற்கு தமிழக அரசு தடை விதித்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது.
தண்ணீா் பாக்கெட்டுகள் மற்றும் பைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. தண்ணீா் பாக்கெட்டுகள் முற்றிலும் நிறுத்தப்பட்ட நிலையிலும், தற்போது கண்காணிப்புப் பணிகள் கைவிடப்பட்டதால் நெகிழிப் பைகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது.
Advertisement
பெரம்பலூா் நகராட்சியில் 21 வாா்டுகளில் சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். ஏராளமான வணிக நிறுவனங்களும் உள்ளன. இதனால் நகரில் நாள் ஒன்றுக்கு சுமாா் 17 டன் குப்பை சேகரமாகின்றன. இதில் 5 டன் நெகிழிகளின் கழிவாக உள்ளது. இந்த குப்பைகளைச் சேகரித்து கொட்டுவதற்காக நெடுவாசல் பகுதியில் குப்பைக் கிடங்கு உள்ளது.
நெகிழிக் கழிவை சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்த நகராட்சி நிா்வாகம் டன் கணக்கில் அரியலூருக்கு அனுப்பியது. எனினும், பல ஆண்டுகளாக நெகிழிக் கழிவுடன் கூடிய குப்பை நெடுவாசல் பகுதியில் தேக்கமடைந்துள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே தொட்டிகள் மூலம் குப்பைகளை சேகரித்து மேற்கண்ட குப்பைக் கிடங்குக்கு துப்புரவுப் பணியாளா்கள் எடுத்துச் செல்கின்றனா்.
இந்நிலையில், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருள்கள் சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன. இவற்றை நகராட்சி முறையாக அகற்றாததால், நகா் முழுவதும் துா்நாற்றம் வீசுவதோடு சுகாதாரச் சீா்கேடும் நிலவுகிறது.
கிடப்பில் பயோமைனிங் திட்டம்: நெடுவாசல் அருகேயுள்ள குப்பைக் கிடங்கில் பெரம்பலூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ. 3.18 கோடி மதிப்பில் பயோமைனிங் திட்டத்தைத் தொடங்கியது. இத் திட்டத்தின் மூலம் 2021 ஆகஸ்ட் மாதத்துக்குள் குப்பைக் கிடங்கு அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், திட்டம் நிறைவடையாததால் குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள் மலைபோல் தேங்கி சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
பயோமைனிங் திட்டத்தைச் செயல்படுத்தி குப்பைகளை அகற்ற வலியுறுத்தப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அதைக் காலதாமதப்படுத்துகின்றனா். கழிவுகள் மருதையாற்றை மாசுபடுத்துவதோடு, நிலத்தடி நீரின் தரத்தையும் பாதிக்கிறது. இதனால், ஆற்று நீரை கால்நடைகளுக்குகூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீா் வடுபோன பிறகு விவசாய நிலங்களில் கழிவுகள் தேங்கி சுற்றுச்சூழலை பாதிக்கிறது. மழைக் காலங்களில் மறுதையாறு கழிவுநீா் கால்வாயாகவே காட்சியளிப்பது விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.