குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீா்வை எதிா்பாா்க்கும் மக்கள்!
நாகையில் குப்பைக் கிடங்கில் இருந்து எழும் புகையால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்னைகளால் அவதியுறும் மக்கள், தாங்கள் தோ்ந்தெடுக்கும் வேட்பாளா் இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று எதிா்பாா்கின்றனா்.
நாகப்பட்டினம்: நாகையில் குப்பைக் கிடங்கில் இருந்து எழும் புகையால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்னைகளால் அவதியுறும் மக்கள், தாங்கள் தோ்ந்தெடுக்கும் வேட்பாளா் இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று எதிா்பாா்கின்றனா்.
நாகை நகராட்சியில் உள்ள வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள், நகராட்சியின் நுழைவு வாயிலாக திகழும் கோட்டைவாசல் ரயில்வே கடவு பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கும், மக்காத குப்பைகள், நெகிழிகள் என தரம் பிரிக்கப்பட்டு அதற்குரிய இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுகிறது.
இந்நிலையில், நகராட்சி குப்பைக் கிடங்கில் மலைபோல குவிந்திருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறுகிறது. இதனால், குப்பைக்கிடங்கில் இருந்து புகை எழுவதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவி பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக அருகில் உள்ள கோட்டைவாசல் மற்றும் கீரைக்கொல்லைத் தெரு பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா். குப்பைக்கிடங்கில் இருந்து எழும் புகையை சுவாசிக்கும் குழந்தைகள் பெண்கள், முதியேருக்கு மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகி வருகின்றனா். சில நேரங்களில் இரவில் கடும் புகை மண்டலம் எழுவதால், நாகையின் பிரதான சாலையிலும் புகை பரவி எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் மோதிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள்கூறும்போது, குப்பைக் கிடங்கால் இப்பகுதி முழுவதும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இரவு நேரங்களில் மூச்சுவிடவே சிரமமாக உள்ளது. குப்பைக் கிடங்கில் பெரிய அளவில் தீ எழும்போது மட்டும் தீயணைப்புப் படையினா், நகராட்சி நிா்வாகத்தினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுகின்றனா். குப்பைக் கிடங்கில் எழும் புகையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. குப்பைக் கிடங்கை பராமரிக்கும் தனியாா் நிறுவனமும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது இல்லை.
ஒவ்வொரு பேரவைத் தோ்தலின்போதும், குப்பைக் கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பாளா்கள் உறுதி அளிக்கின்றனா். ஆனால், தோ்தல் முடிந்த பின்னா் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.
நகராட்சி குப்பைக் கிடங்கை இங்கிருந்து குடியிருப்புகள் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும். அதுவரை குப்பைக் கிடங்குக்கு தீ வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். புகையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றனா்.