முகப்பு
பிரபலங்கள் - புத்தகங்கள்

'இலக்கியத்தின் இருப்பியலும், திறனாய்வின் இயங்கியலும்': இலக்கிய மாமியார்கள்! -கவிஞர் பால.இரமணி

‘இலக்கியத்தின் இருப்பியலும், திறனாய்வின் இயங்கியலும்’  என்ற முனைவர் க.பஞ்சாங்கம் எழுதிய நூல் அண்மையில் மட்டுமின்றித் தொலைவில் கூடத் தோற்றப்பொலிவு கொண்ட படைப்பாகத் திகழ்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
'இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும்' / கவிஞர் பால.இரமணி
பகிர்:

சில நூல்கள் மனதைத் தைக்கப் பயன்படும்; மற்றும் சில நூல்கள் மனதில் வைக்கப் பயன்படும். இந்தத் தைத்தலும் வைத்தலும் தான் அறிவு வளர்ச்சியின் பரிமாணமும், பரிணாமமும் என்பதாகவே பதிவு செய்யப்படுகின்றன. நூல்களை நாம் ’வழிகாட்டி’ எனக் கொண்டாலும், காட்டுகின்ற வழி நமக்கு வசதிப்படுகிறதா எனக் கொள்ளும் மனப்பாங்கு நம்முடையதே. அந்த வகையில், தற்போது நான் படித்த ஒரு நூலைக் குறிப்பிட்டால், ’இலக்கியப் பெருத்தமாக’ அமையும் என நம்புகிறேன்.

‘இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும்’ (காவ்யா வெளியீடு, பெங்களூர்) என்ற முனைவர் க.பஞ்சாங்கம் எழுதிய நூலைத் தான், என் சுட்டுவிரல் தொட்டுக் காட்டுகிறது. இருபது தலைப்புகளில், தமிழில் இருப்பதை யதார்த்தமாக்கும் இந்த நூல் – அண்மையில் மட்டுமின்றித் தொலைவில் கூடத் தோற்றப்பொலிவு கொண்ட படைப்பாகத் திகழ்கிறது. ‘’மரபு நிலை வேறு வேறு என்மாறுகையில் மற்றவை பிறிதாகி…. பிறிதாகி’’ என்ற கோட்பாட்டை இந்த நூல் வரிவடிவில் திரியிட்டு ஒளிபாய்ச்சுகிறது.

பழக்கமாகிப் போன வாழ்க்கையில், வாசித்தலும் யோசித்தலும் பழகிப்போனவையாகக் காணப்படுகின்ற இன்றைய நிலையில் தமிழ் மொழியைத் தம்முடைய இயலாமைக்கு ஏற்றவாறு மெலியச் செய்கின்ற எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளிகள் எனச் சுயநீச்சல் அடிக்கின்ற சூன்யக்காரர்களுக்கும், இந்த நூல் மாந்திரிகமாகத் தோற்றமளிக்கும்.

Advertisement

‘படைப்பாளியா?’, ‘உற்பத்தியாளனா?’ எனப்பரந்து ஆராயும் க.பஞ்சாங்கம், அதிகார அமைப்புகளும் கலகக் குரல்களும் விமர்சனம் என்ற பெயரில் விசனத்தை ஏற்படுத்துகின்றனவே; இதற்கொரு விடியல் எப்போது? எனலாகும் ஏக்கத்தைக் காட்டியிருக்கிறார். ‘புரிதல்’ இல்லாத ’பயிற்சி’யை மேற்கொள்ளும் எழுத்தாளர்களையும், எழுத்தும் கற்பனையும் படைப்பாற்றலுமற்ற விமர்சகன் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் தேள்களையும் நாம் அடையாளம் காண இந்த நூல் எப்போதும் பயன்படும்.

தமிழ்த் திறனாய்வில் சிக்கல்கள் உண்டு; இந்தச் சிக்கல்கள் மெல்ல மெல்ல விரிந்து, குழப்பங்கள் ஆகின்றன. இந்தக் குழப்பக் குட்டையில் எளிதாக மீன் பிடிக்கும் விமர்சகர்களுக்கு நாம் என்ன சொல்ல? சாதியப் போர்வை, எதையும் சாதிப்பதில்லை; சமுதாயத்திற்கு எதையும் போதிப்பதில்லை, தற்செயலாக வளர்ச்சி பெற்ற இந்தப் போக்கு, அரசியல் சார்ந்தது. இந்த விமர்சகர்களால் இலக்கிய விளைச்சல்களை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. உயர் சாதி இலக்கியம், பிற்பட்டோர் இலக்கியம், தலித்திய இலக்கியம் என்று பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்த விமர்சகர்கள் தங்கள் குடிசைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

இலக்கிய வாழ்வில் மட்டுமல்ல; நம்மை இயக்கும் வாழ்வில் கூட இந்த விமர்சனச் சிக்கல்கள் வேரூன்றிக் காணப்படுகின்றன. மருமகளைக் குறை கூறும் மாமியார்களில் பலர், சிறந்த மருமகளாய் இருந்தாரில்லை; அது போன்றே இன்றைய இலக்கியக் காட்சியும் பூசல் கொண்டது. விமர்சகர்கள் படைப்பாளிகளாய் இருக்கத் தேவையில்லை என்ற சப்பை விளக்கங்கள் சபையில் ஏறாதவை. இந்த விமர்சகர்களில் பலர், இலக்கிய மாமியார்களாகத் தங்களைச் சிருஷ்டித்துக் கொண்டு, படைப்பாளிகளைத் தாக்குகின்ற ’தாதா’க்களாக உலா வருகிறார்கள். விமர்சனம் என்பது நெருடல் இல்லாத வருடல்; இந்த வருடலின் போது, நீண்ட நகங்கள் காயப்படுத்திவிடும்.

இந்த நூலைப் படிக்கிற போது, இத்தகைய எண்ணங்களே நம்முள் எழுகின்றன. எவரையும் புண்படுத்தாத, புரிதல் கொண்ட அற்புதமான விமரிசனக் கலையை டாக்டர் க.பஞ்சாங்கம் நமக்குக் கற்றுத் தருகிறார்.

இலக்கிய வளர்ச்சியைக் கணிக்கின்ற இந்த நூல், என்னுள் இன்னொரு விமர்சனத்தையும் செய்யத் தூண்டியது. தமிழுக்குக் கிடைத்த இது, வாக்கியப் பஞ்சாங்கம் அல்ல. திருக்கணிதப் பஞ்சாங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments