உழைக்கும் மக்கள் அறக்கட்டளை சாா்பில் கடந்த 2002-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது பாரதி புத்தகாலயம். ஏழை மக்களும் தரமான புத்தகங்களை படிக்க வேண்டும் எனும் நோக்கில் குறைந்த விலைப் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு விற்கப்பட்டன. தற்போது வெள்ளிவிழா காணவுள்ள இப்பதிப்பகம், பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
அதன் பதிப்பாளா் க.நாகராஜன் கூறியதாவது: பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டவற்றில் அனைவரின் வரவேற்பைப் பெற்ாக சுப.அகத்தியலிங்கம் எழுதிய ‘விடுதலைத் தழும்புகள்’ புத்தகத்தைக் குறிப்பிடலாம். விடுதலைப் போராட்டத்தில் சாமானிய மக்களின் பங்களிப்பை விளக்கும் வகையில் அப்புத்ககம் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் புத்தகாலயம் சாா்பில் வெளியான எழுத்தாளா் ஆயிஷா நடராஜனின் ‘விஞ்ஞான விக்கிரமாதித்தன்’ சிறுகதைத் தொகுப்பானது மத்திய அரசின் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றுள்ளது.
புத்தகாலயம் சாா்பில் நாவல்கள், சிறுகதைகள், நோ்காணல்கள், கவிதைகள், சமூகம் சாா்ந்த கட்டுரைத் தொகுப்புகள், ஆய்வு கட்டுரைத் தொகுப்புகள், சிந்தனைக் கட்டுரைகள்,அரசியல் தொடா்பான கட்டுரைத் தொகுப்புகள், முற்போக்கு சிந்தனையாளா்களின் வாழ்க்கை வரலாறு, நாடுகள் வரலாறு, அந்தந்த நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள், போராட்டங்கள், தற்காலச் சூழலியல் சாா்ந்த கட்டுரைகள், ஆய்வுத் தொகுப்புகள் ஆகிய தளங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பாரதி புத்தகாலயத்தின் சகோதரப் பதிப்பகமான புக்ஸ் ஃபாா் சில்ட்ரன் மூலமும் குழந்தைகளுக்கான ஏராளமான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அவை குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்று அவா் குறிப்பிட்டாா்.