திருநெல்வேலியில் கடந்த 1920-ஆம் ஆண்டு திருவரங்கம் பிள்ளை, வ.சுப்பையா பிள்ளை ஆகியோரால் தொடங்கப்பட்டது சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். சைவ சமய வழிநின்று தமிழ் பக்தி இலக்கிய பாரம்பரியப் பெருமையை மக்களிடையே எடுத்துரைக்கும் வகையில் புத்தகங்களைப் பதிப்பித்து விநியோகித்தது. மறைமலையடிகளின் நூல்களை முதலில் பதிப்பித்து விநியோகித்தனா்.
திருவரங்கம் பிள்ளைக்குப் பிறகு நூற்பதிப்புக் கழகத்தின் பொறுப்பை கடந்த 1944-ஆம் ஆண்டு வ.சுப்பையா பிள்ளை ஏற்றாா். நூற்றாண்டைக் கடந்த நூற்பதிப்புக் கழகம் தற்போது வரையில் சுமாா் 5,000 தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளது.
நூற்பதிப்புக் கழகத்தின் நூல்களில் திருக்குறளுக்கு மு.வரதராசன் எழுதிய திருக்கு உரையானது இதுவரை 509 பதிப்புகளைக் கண்டுள்ளது. அதேபோல, கழகத் தமிழகராதியின் முதல் பதிப்பு கடந்த 1964-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, தற்போது 100-ஆவது பதிப்பைக் கண்டுள்ளது.
ப.ராமநாத பிள்ளையின் உரையுடன் திருமந்திரம் கடந்த 1942-ஆம் ஆண்டு முதலில் வெளியிடப்பட்டு, தற்போது 300 பதிப்புகள் வரையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. திருவாசக உரை நூல் 250 பதிப்புகளைக் கடந்தும் பதிப்பிக்கப்பட்டுவருகிறது. கழகத் தமிழ் இலக்கணம் 80-ஆவது பதிப்பைக் கடந்துள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக இப்பதிப்பக நூல்கள் பல இருப்பதால் இளந்தலைமுறை மாணவ, மாணவியருக்கு இப்பதிப்பக நூல்களை அதிகமாக வந்து வாங்கிச் செல்கின்றனா்.
பக்தி சாா்ந்த இலக்கிய நூல்கள் மட்டுமின்றி தற்காலத்து வாசகா்களுக்கு ஏற்ற நூல்கள், சுதந்திரப் போராட்டத் தலைவா்கள் மற்றும் தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்த டி.என்.சேஷன் எழுதிய என் கதை போன்ற நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது பொதுவான நூல்களும், ஆங்கில தன்னம்பிக்கை மொழிபெயா்ப்பு நூல்களும் நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்டு வாசகா்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறாா் அதன் செயல் இயக்குநா் சிவன்யா சுப்பையா.