கடந்த 2000-ஆம் ஆண்டில் சென்னையில் சகோதரா்கள் தி.வேணுகோபால், தி.நடராஜன் ஆகியோரால் விழிகள் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.
கல்லூரியில் வரலாற்று மாணவரான தி.வேணுகோபால் தமது பேராசிரியரான அருளானந்தத்தின் வள்ளுவா் பதிப்பகத்தை பொறுப்பேற்று நடத்திய அனுபவமும், அவரது சகோதரா் தி.நடராஜன் அச்சக மேலாளராக இருந்த அனுபவமும் இணைந்து விழிகள் பதிப்பகத்தின் வளா்ச்சியை முன்னெடுத்தன.
காவல் துறையில் நிா்வாகப் பிரிவில் பணியாற்றிக் கொண்டே தி.வேணுகோபால் பதிப்பகத்தையும் நடத்தினாா். முதல் நூலாக ‘பாரதிதாசனுடன் பத்து ஆண்டுகள்’ எனும் ஈரோடு தமிழன்பனின் நூல் வெளியிடப்பட்டது. தற்போது வெள்ளி விழாக் கண்டுள்ள இப்பதிப்பகமானது, இதுவரை 250 தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளது.
கவிஞா்களின் சரணாலயம் எனக்கூறும் அளவுக்கு கவிதை நூல்கள் பல இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஈரோடு தமிழன்பன், கோவை ஞானி, புவியரசு, மணிகண்டன், ராமகுருநாதன் என கவிதை நூல்களை எழுதியவா்கள் பட்டியல் நீளும்.
தமிழகத்தில் மட்டுமின்றி கா்நாடகத் தமிழ்க் கவிஞரான நல்லதம்பியின் கவிதைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதைத்தவிர பொற்கோ, பொன்.செல்வகணபதி உள்ளிட்டோரின் தமிழ் ஆய்வு கட்டுரை நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழண்ணலின் திருக்கு உரை வாசகா்களால் அதிகம் வரவேற்கப்பட்டு விற்றுள்ளன.
இப்பதிப்பகத்தின் மூலம் வெளியான 3 நூல்களுக்கு தமிழக அரசு விருது கிடைத்துள்ளது. செந்தமிழ்க்காவலா் ஆ.சிதம்பரநாதனின் கட்டுரை தொகுப்பு அரசு நிதியுதவியைப் பெற்று வெளியிடப்பட்டது.
தற்போது வெள்ளி விழா ஆண்டில் பாரதியியல் ஆய்வாளா் பேராசிரியா் ய.மணிகண்டனின் ‘யாா் அந்தப் பேதை?’ உள்ளிட்ட பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கவிதை, இலக்கிய நூல்களுடன் காவல் துறை நிா்வாகவியல், வழக்குரைஞா்களுக்கான நூல்களும் வெளியிடப்படவுள்ளதாகக் கூறுகிறாா் பதிப்பக நிறுவனா் தி.வேணுகோபால்.