வர்த்தகம்

முதலீட்டுக்குச் சிறந்த "கோல்டு ஈடிஎஃப்'

எம். சடகோபன்

மஞ்சள் உலோகம் என்று சொல்லப்படும் தங்கத்துக்கு மக்களிடம் எப்போதுமே மவுசு இருக்கத்தான் செய்கிறது. "ஆறிலிருந்து அறுபது வரை' அனைத்து மகளிரும் விரும்புவது தங்க ஆபரணங்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. உறவினர்களின் வீட்டுக்குச் செய்முறை, நேர்த்திக் கடன் போன்ற சமயங்களில் நடுத்தரக் குடும்பங்களைக் கவலைப்படுத்தும் விஷயமும் தங்கத்தின் விலை உயர்வுதான்.
மேலும், பல குடும்பங்களில் நிதி நெருக்கடி ஏற்படும் நேரங்களில் உதவுவதும், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு உடனடியாகக் கை கொடுப்பதும் குடும்பத்தினர் சேமித்து வைத்திருக்கும் தங்கம்தான். இந்தியாவைப் பொருத்தவரையிலும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் தங்க நகை சேமிப்பு என்பது நமது பாரம்பரிய பழக்கமாகத்தான் இருந்து வருகிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்த தொகை ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் என்றால் தங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள "காதலை' அறியலாம். இது தொடர்ந்து இப்போது வரையிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் பார்த்தால் தங்கப் பயன்பாட்டில் இந்தியர்கள்தான் முன்னணியில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இப்போது பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளில் வருமானம் என்பது நிலையானதாக இருப்பதில்லை. இதனால், பெரும்பாலானோர் விரும்பும் இடர்பாடில்லா முதலீடு தங்கமாகத்தான் உள்ளது. பொதுவாக ஒரு பொருளின் விலை உயர்ந்தால் அதை வாங்குவதற்கு மக்கள் யோசிப்பார்கள்; அல்லது வாங்குவதைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால், விலை கிடு கிடுவென உயர்ந்தாலும் தொடர்ந்து அதிமாக வாங்கும் பொருள்களில் உலகில் ஒன்று உள்ளது என்றால் அது தங்கமாகத்தான் இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரையிலும், மக்களிடம் தங்கம் வாங்குவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்தியர்கள் குறிப்பாக பெண்மணிகள் தங்க ஆபரணத்தை வாங்குவதில் தொன்றுதொட்டு அதிகக் கவனம் செலுத்துவதைக் கண்டு வருகிறோம்.
ஆனால், இப்போதைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் பணத்தைமுதலீடு செய்ய ஆபரணத் தங்கத்தைவிட வேறு பல நல்ல வழிகள் உள்ளன. குழந்தைகளின் கல்விச் செலவு, திருமணச் செலவு, ஓய்வு கால திட்டமிடல் உள்ளிட்ட அனைத்துக்கும் தங்கம்தான் ஒரு சிறந்த முதலீட்டுச் சாதனமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தொன்று தொட்டு தங்க நகை சேமிப்புத் திட்டங்களில் இந்தியர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், கோல்டு ஈடிஎஃப், கோல்டு ஈடிஎஃப் பண்டுகள், தங்க சேமிப்பு ஃபண்டுகள், தங்கச் சுரங்க மியூச்சுவல் ஃபண்டுகள், இ-கோல்டு, தங்கம், வைர நிறுவனப் பங்குகள், கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் கோல்டு ஈடிஎஃப் (எஞகஈ உபஊ-எஞகஈ உலஇஏஅசஎஉ பதஅஈஉஈ ஊமசஈ) என்ற தங்க முதலீட்டுத் திட்டம் அனைத்துத் தர மக்களுக்கும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. முழுக்க, முழக்க முதலீட்டு நோக்கத்தில் தங்கத்தைப் பார்ப்பவர்களின் முதல் விருப்பத் தேர்வாகவும் கோல்டு ஈடிஎஃப் இருந்து வருகிறது.

"டீ மேட்' கணக்கு

மின்னணு முறையில் பங்குகளை முதலீட்டாளர்களின் கணக்கில் வரவு வைக்கும் முறைதான் டீமேட் (ஈஉஙஅபஉதஐஅகஐநஉஈ அஇஇஞமசப) எனப்படுகிறது. இதை வங்கிகள், பங்குத் தரகர்களிடம் டீமேட் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இதை ஒரு வங்கி சேமிப்புக் கணக்கு போல கருதலாம். இதில் பணத்துக்கு பதில் யூனிட்டுகளாக முதலீட்டாளரின் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். டீமேட் கணக்குக்கான பராமரிப்புக் கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை சிறிய தொகைதான் செலுத்த வேண்டியது வரும்.

எப்போது அறிமுகம்?

தங்கத்தில் முதலீடு செய்யும் கோல்டு ஈடிஎஃப் திட்டம் இந்தியாவில் 2007-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஹெச்டிஎஃப்சி கோல்டு ஈடிஎஃப், ஐசிஐசிஐ புருடென்சியல் கோல்டு ஈடிஎஃப் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை நிர்வகித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் நிர்வகித்து வரும் கோல்டு ஈடிஎஃப் ஃபண்டு மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் மூலம் அறியலாம்.

கூடுதல் வசதி

மிகச் சிறிய அளவிலும் தங்க ஈடிஎஃப் வாங்க முடியும் என்பதே இதன் கூடுதல் வசதி. அதாவது அரை கிராம் அளவுக்குக் கூட வாங்க முடியும். சிறுகச் சிறுக ஈடிஎஃப் வாங்கிச் சேகரிப்பவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரும் தங்கத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிடலாம். கோல்டு ஈடிஎஃப் திட்டம், தங்கத்தை வாங்காமலேயே அதில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. தங்க நாணயங்கள், கட்டிகள், நகைகள் போன்றவற்றை வாங்கும் போது அதன் தரத்தை மதிப்பீடு செய்வது சிரமமான ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் அவற்றைப் பாதுகாத்து வைப்பதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஆனால், கோல்டு ஈடிஎஃப் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் அவர்களுக்கு யூனிட்டுகள் கிடைக்கும். சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப இந்த கோல்டு ஈடிஎஃப் யூனிட்டின் மதிப்பு இருக்கும்.

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் கோல்டு ஈடிஎஃப் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளைப் போன்று எளிதில் வாங்கவும், விற்கவும் முடியும். கோல்டு ஈடிஎஃப் யூனிட்டுகளை வாங்க விரும்புவோர் செபி அமைப்பிடம் பதிவு பெற்ற பங்குத் தரகு வர்த்தக நிறுவனத்தின் வாயிலாக "டீமேட்' கணக்கு, "டிரேடிங்' கணக்கு தொடங்க வேண்டியது அவசியமாகும். கோல்டு ஈடிஎஃப் ஃபண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் திரட்டப்படும் நிதி தங்கத்தில்தான் முதலீடு செய்யுப்படுகிறதா என்பதை "செபி' கண்காணித்து வருகிறது. 2011, ஏப்ரல் முதல் கோல்டு ஈடிஎஃப்-இல் தங்கம் வாங்கியது தொடர்பான விரிவான அறிக்கையை அரையாண்டுக்கு ஒரு முறை ஃபண்டுகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று செபி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோல்டு ஈடிஎஃப் திட்ட அறிமுகத்தின் போது வாங்க நினைப்பவர்கள் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை நிறுவனத்தைப் பொருத்து ரூ.5,000, ரூ.10,000, ரூ.20,000 ஆக உள்ளது. ஆனால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு சுமார் ரூ.1000 இருந்தாலே முதலீட்டை ஆரம்பிக்க முடியும். தரகுக் கட்டணம் உண்டு. இந்தியாவில் கோல்டு ஈடிஎஃப்கள் அனைத்தும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

பணமாக்குவது எப்படி?

அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படும்பட்சத்தில் தங்க ஆபரணங்கள், நாணயங்களை விற்பனை செய்வதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. ஆனால், கோல்டு ஈடிஎஃப் யூனிட்டுகளை எளிதில் விற்பனை செய்ய முடியும். விற்பனை செய்யும் தேதியன்று ஒரு யூனிட் தங்கம் என்ன விலைக்கு பரிமாற்றம் ஆகி வருகிறதோ அதே விலைக்கு விற்பனை செய்ய முடியும். மேலும், எதிர்பார்க்கும் அளவுக்கு விலை ஏறிய பிறகும் யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம். யூனிட்டுகளை விற்கும் போது அதன் என்ஏவி மதிப்புக்கு ஏற்ப பணமாக முதலீட்டாளர்களினவங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆன்லைன் வர்த்தகக் கணக்கு இருந்தால் இருந்த இடத்தில் இருந்தபடியே யூனிட்டுகளை விற்றுவிடலாம். தங்கத்தை சிறந்த முதலீட்டுப் பொருளாகக் கருதுபவர்களுக்கு கோல்டு ஈடிஎஃப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல.

பட்டியலில் உள்ள கோல்டு ஈடிஎஃப்

தேசியப் பங்குச் சந்தையில் பல்வேறு கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆக்சிஸ் கோல்டு, பிஎஸ்எல் கோல்டு ஈடிஎஃப், சிஆர்எம்எஃப்சி ஈடிஎஃப், கோல்டு பீஸ், கோல்டு ஐடபிள்யூஐஎன், கோல்டு ஷேர், ஹெச்டிஎஃப்சி எம்எஃப்ஜி ஈடிஎஃப், ஐடிபிஐ கோல்டு, ஐவிஇஸட்ஐஎன் கோல்டு, கோடாக் கோல்டு, க்யூகோல்டு ஹாஃப், எஸ்ஈடிஎஃப் கோல்டு உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டு வர்த்தகம் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சிலவற்றின் முகமதிப்பு ரூ.10 ஆகவும், சிலவற்றின் முகமதிப்பு ரூ.100 ஆகவுள்ள உள்ளன. தங்கத்தின் விலை சமீப காலமாக தொடர்ந்து குறைந்து வந்துள்ளதால் கோல்டு ஈடிஎஃப்-இன் மதிப்பும் குறைந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை 52 வார குறைந்தபட்ச விலைக்கு அருகில் டிரேட் ஆகி வருகிறது. இந்தத் தருணத்தை முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பாகக் கருதலாம் என்று முதலீட்டு ஆலோசகர்கள், வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தங்க முதலீடு என்பது நமது பாரம்பரியத்தோடு தொடர்புடையதாக உள்ளது. குழந்தை பிறந்த பத்தாவது நாளில் இருந்தே அதற்கு தங்க நகைகளை அணிந்து அழகு பார்ப்பது நம் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அக்ஷ்ய திருதியை அன்று தங்கம் வாங்குவதை அதிருஷ்டமாக மக்கள் குறிப்பாக பெண்கள் கருதுகின்றனர். மேலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போதும் தங்க ஆபரணங்கள் வாங்குவது கலாசாரமாக மாறியுள்ளது. இதுபோன்ற சமயங்களில் இனிமேல், செலவு குறைவான, மிகவும் பாதுகாப்பான, சிக்கல் இல்லாத , எளிதல் வாங்க, விற்கக் கூடிய கோல்டு ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடுகளைப் பெருக்கி கூடுதல் லாபம் பெறலாம் என்கின்றனர் பங்குத் தரகு நிறுவனத்தினர்.

எப்படி முதலீடு செய்வது?

பரஸ்பர நிதி திட்டங்களில் ஒரு வகைதான் கோல்டு ஈடிஎஃப் (தங்க நிதியம்). இதில் ஒரு யூனிட் என்பது ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும். கோல்டு ஈடிஎஃப்-இல் திரட்டப்படும் நிதியில் சுமார் 90% தங்கமாக வாங்கப்படுகிறது. கோல்டு ஈடிஎஃப் திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தும் போது பரஸ்பர நிதி நிறுவனம் மூலம் முதலீடு செய்ய வேண்டும். வெளியீட்டுக் காலம் முடிந்த பிறகு இந்த யூனிட்கள், பங்குகள் போல பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுவிடும். அதன் பிறகு பங்குச் சந்தைகளின் மூலம்தான் கோல்டு ஈடிஎஃப்-ஐ வாங்கவோ, விற்கவோ முடியும்.
பங்குச் சந்தைகள் இயங்கும் நேரமான காலை 9.15 முதல் மாலை 3.30 மணி வரையிலான காலத்தில் எப்போது வேண்டுமானாலும் பங்குகளை போல கோல்டு ஈடிஎஃப்-ஐயும் வாங்கலாம், விற்கலாம். விலை மாற்றத்தைப் பொருத்து இதன் நிகர சொத்து மதிப்பு ("என்ஏவி') மாறும். மற்ற தங்க முதலீட்டு முறைகளுடன் ஒப்பிடும் போது இதில் செலவு குறைவு என்பது கூடுதல் அம்சம்.

கோல்டு ஈடிஎஃப் விலை என்ன?

தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கோல்டு
ஈடிஎஃப்-இன் தற்போதைய விலை, 52 வார அதிகபட்சம்,
52 வார குறைந்தபட்சம் (ரூபாயில்) விவரம்:


திட்டத்தின் பெயர் தற்போதைய விலை 52 வார அதிக
பட்சம் 52 வார குறைந்தபட்சம்
ஆக்சிஸ் கோல்டு 2523.10 3085.10 2467.00
பிஎஸ்எல் கோல்டு ஈடிஎஃப் 2652.00 3350.00 2552.55
சிஆர்எம்எஃப்ஜி ஈடிஎஃப் 2665.00 3180.20 2500.40
கோல்டு பீஸ் 2563.00 2918.80 2475.50
கோல்டு ஐவின் 0259.75 0309.95 0251.15
கோல்டு ஷேர் 2520.55 3013.45 2461.00
ஹெச்டிஎஃப்சி எம்எஃப்ஜி ஈடிஎஃப் 2613.00 3157.00 2550.00
ஐடிபிஐ கோல்டு 2650.00 3000.15 2512.05
ஐவிஇஸட்ஐஎன் கோல்டு 2620.00 2989.40 2407.00
கோடாக் கோல்டு 0250.65 0308.70 0245.10
க்யூகோல்டு ஹாஃப் 1278.00 1441.00 1239.95
எஸ்ஈடிஎஃப் கோல்டு 2595.05 2972.30 2536.00
தகவல் உதவி: தேசிய பங்குச் சந்தை

பாதுகாப்பான முதலீடு தங்கம்!

சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல், நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் எல்லாம் தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு பாதுகாப்பானதாகவே இருந்துள்ளது. அந்தக் காலக் கட்டத்தில் நிறுவனப் பங்கு முதலீடு அளவுக்கு பெரிய அளவுக்கு இழப்பைத் தராமல் முதலீட்டாளர்களைப் பாதுகாத்து வந்திருக்கிறது தங்கம். அதன் விவரம்.


காலம் சம்பவம் பங்கு முதலீடு வருமானம் (%) தங்க முதலீடு வருமானம் (%)

1929-1932 மிகப்பெரிய பொருளாதார சரிவு -89 0.29
1939-1942 இரண்டாம் உலகப் போர் -37 -1.66
1973-1974 அரபு நாடுகளின் கச்சா எண்ணெய் பிரச்னை -38 182
1989-2003 ஜப்பான் ரியல் எஸ்டேட்,
பங்குச் சந்தை சரிவு -79 -17.77
1997-1998 ஆசிய நாடுகளின்
நிதி நெருக்கடி -59 14
2000-2002 இன்டர்நெட் நிறுவனங்கள் வீழ்ச்சி அமெரிக்காவில் இரட்டை கோபுரத் தாக்குல் -51 14
2007-2009 அமெரிக்காவில் வீட்டு
அடமானச் சந்தை வீழ்ச்சி -59 16


தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உலக அளவில் தங்கம் வெட்டி எடுப்பது குறைந்து கொண்டு வருவது முதல் காரணமாகும். சர்வதேச அளவில் தங்கத்தின் இருப்பும் குறைவாகத்தான் உள்ளது. 2001-ஆம் ஆண்டு முதல் உலக அளவில் தங்கத்தின் உற்பத்தி குறைந்து கொண்டு வந்துள்ளது. தங்க உற்பத்தி தேவைப்பாட்டில் 30 சதவீதம் கூட இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது தவிர, பணவீக்கம், பங்குச் சந்தை, டாலர் மதிப்பு, சர்வதேச அளவில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆன் லைன் வர்த்தகம், போர் அபாய சூழ்நிலை உள்ளிட்டவையும் தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
முன்பெல்லாம், அணிகலனுக்கு மட்டுமே தங்கத்தை மக்கள் பயன்படுத்தினர். அதற்காக தங்கத்தை வாங்கி வந்தனர். ஆனால், இப்போது தங்கம் என்பது அணிகலனாக மட்டுமல்லாமல், சிறந்த முதலீட்டு வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. அதன் காரணமாக தங்கத்தை வாங்கிக் "குவிக்கிறார்கள்'.
அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் வங்கிகள் "திவால்' ஆகியுள்ளன. இதனால், மக்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைப் பார்க்கிறார்கள். இதன் காரணமாக வங்கிகளில் முதலீடு செய்வதைக் குறைத்துக் கொண்டு அல்லது தவிர்த்துவிட்டு தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள். சமீப காலமாக தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் என்ற மஞ்சள் உலோகம் அழுகும் பொருள் அல்ல. காலத்தால் அழியாத அதன் தன்மை, இயல்பாகவே தங்கத்தின் மீது பெண்களுக்கு உள்ள மோகம், உலக அளவில் எந்த நாடும் தங்கத்துக்கு மாற்றாக எந்தப் பொருளையும் தர தயாராக இருப்பது போன்றவற்றின் காரணமாக தங்கத்தின் மதிப்பும், விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கரன்சியின் மதிப்பைக் குறைக்கும் போதெல்லாம், அப்போது மக்கள் தங்களின் சேமிப்பு, முதலீட்டை தங்கமாகத்தான் மாற்ற முனைவது இயல்பு. இதனால், தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்வதும் கண்கூடு. இது போன்ற பல்வேறு காரணங்களால் நவீன உலகில் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT