தொழில்மயமாக்கலில் வட மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. குறிப்பாக, ஜவுளி உற்பத்தி, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, தோல் பொருள்கள் உற்பத்தியில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கிறது. தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1990-களில் இருந்து நாட்டின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் தனியார் துறையின் பங்கு அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால், தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே போட்டி உருவானபோது, தமிழ்நாடு அரசு 1992-இல் தொழில் கொள்கையை வெளியிட்டு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. இதனால்தான் தமிழகத்தில் மென்பொருள் நிறுவனங்கள், மின்சாரம், மின்னணு தொழில் நிறுவனங்கள், மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும், இந்த நிறுவனங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்கும் தொழில் நிறுவனங்களும் உருவாகின.
நாட்டில் பொருளாதார ரீதியாக முன்னணியில் இருக்கும் மாநிலமான தமிழ்நாட்டில், கடந்த 2015-16-ல் தொழில் வளர்ச்சி விகிதம் 8.79 சதவீதமாக இருப்பதாகவும், நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 11.50 சதவீதமாக இருப்பதாகவும் உலக வங்கி வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மேலும், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஜூன் 2016 புள்ளிவிவரப்படி, தமிழ்நாட்டில் ரூ.11.09 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் பல்வேறு கட்டங்களில் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
தமிழக அரசும், அதிகமான தனியார் - பொதுத் துறை முதலீட்டை ஈர்த்து, அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது.
ரூ.15 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதையே தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 தனது இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு வெகுவாக உதவும் இடத்தில் உள்ளது சுமார் 120 ஆண்டு பழைமை வாய்ந்த நமது ஜவுளித் துறை. ஆண்டுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் இந்தத் துறையில் தமிழகம் முன்னணிக்கு வந்தது இயற்கையாக நடைபெற்றது.
குறிப்பாக இந்திய பின்னலாடையின் தலைநகராக திருப்பூர் திகழ்வதற்கு அரசுகள், திட்டங்கள் காரணமாக இருந்ததில்லை என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம்.
நாட்டின் பருத்தி கொள்முதல், நூல் உற்பத்தி, ஏற்றுமதி, பின்னலாடை உற்பத்தி என அனைத்திலும் தேசிய அளவில் முக்கிய இடம் வகிக்கும் தமிழக ஜவுளித் துறை, எந்தக் காலத்திலும் சாகா வரம் பெற்ற துறையாகவே உள்ளது.
இருப்பினும், சில ஆண்டுகளாக தமிழக ஜவுளி உற்பத்தித் துறை, பிற மாநிலங்களுடன் போட்டியிட முடியாதவாறு கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக நூற்பாலைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இதுபோல் நெருக்கடிகளை சந்தித்து வரும் ஜவுளித் துறைக்கு கொள்கை ரீதியான ஊக்கமளிப்பதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிப்பதுடன், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்கிறார் அவர்.
தமிழகத்தைப் பார்த்து தங்களது பகுதியில் பின்னலாடை, ஆயத்த ஆடை உற்பத்தியைத் தொடங்கிய குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் தங்களுக்கென புதிய ஜவுளிக் கொள்கையை உருவாக்கி, முதலீடுகளை ஈர்த்து வளமையாக உள்ளன. மேலும், குறுகிய காலத்துக்குள் ஜவுளிக் கொள்கையை புதுப்பித்துக் கொள்வதன் மூலம் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகின்றன.
காலத்துக்கேற்ப கொள்கையை புதுப்பித்துக் கொள்ளத் தவறியதால், தமிழக ஜவுளித் துறைக்கு வர வேண்டிய முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்குச் செல்ல நேரிடுகின்றன. திருப்பூர் போன்ற நகரங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள், தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி, புதிய முதலீடுகளுக்கு வட்டி சலுகை போன்றவற்றை உள்ளடக்கியதாக புதிய ஜவுளிக் கொள்கை அமைய வேண்டும் என்றார் அவர்.
தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய புதிய ஜவுளிக் கொள்கையால் மட்டுமே மற்ற மாநிலங்களுடனான போட்டியை சமாளித்து தமிழக ஜவுளி உற்பத்தியாளர்களால் தொழிலில் நிலைக்க முடியும் என்கிறது ஜவுளித் தொழில் அமைப்பான டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு.
மாநிலத்தின் பருத்தி தேவை ஆண்டிற்கு சுமார் 120 லட்சம் பேலாக உள்ளது. ஆனால், நமது மாநிலத்தில் 7 லட்சம் பேல் பருத்தி மட்டுமே உற்பத்தி மூலம் கிடைக்கிறது. பருத்தி உற்பத்தியை அதிகரித்து ஜவுளித் தொழிலை ஊக்குவிக்க புதிய ஜவுளிக் கொள்கை அறிவிக்க வேண்டும்.
இதன் மூலம் மட்டுமே மற்ற மாநிலங்களுடன் தமிழகம் போட்டியிட முடியும் என்கிறார் அமைப்பின் பொதுச் செயலர் பிரபு தாமோதரன்.
புதிய ஜவுளிக் கொள்கை அறிவிப்பு மூலமாக மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்கள் கடந்த காலங்களைக் காட்டிலும் பல மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளன. நமக்கு என ஜவுளித் தொழில் கொள்கை இல்லாதபோதும் அவர்களின் போட்டியைச் சமாளித்து வருகிறோம்.
வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்கள் தமிழகத்தில் இயற்கையாகவே அமைந்துவிட்ட ஜவுளித் தொழில் குழுமங்களை (கிளஸ்டர்) கண்டு அதிசயிக்கின்றனர். பஞ்சாலை, நூற்பாலை, சாயப்பட்டறை, விசைத்தறி, கைத்தறி, ஆயத்த ஆடை, வீட்டு உபயோக ஜவுளிகள் தயாரிப்பு என பல்வேறு தொழில்களில் ஈடுபடும் கிளஸ்டர்கள் அருகருகே அமைந்திருப்பது வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைத்திடாத நல்வாய்ப்பு.
இதை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். புதிய ஜவுளிக் கொள்கை என்பது பெரிய அளவில் செலவுபிடிக்கக் கூடிய திட்டமல்ல. தற்போது உள்ள கொள்கைகள், விதிகளில் சில திருத்தங்கள், மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் உற்பத்தியைப் பெருக்கி வருவாயை அதிகரிக்க முடியும்.
அதைத் தவிர திருப்பூருக்கு வடிவமைப்புப் பூங்கா, நூற்பாலைகளுக்கு மின்கட்டணச் சலுகை, குஜராத்தைப் போன்று ஆண்டுதோறும் அரசே நடத்தும் சர்வதேச கண்காட்சி, இணைய வர்த்தகம் என, யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்பதையும், எந்த இடத்தில் நமது மாநிலம் பலமிழந்து காணப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்வதற்கு முதலில் மாநில அரசு ஜவுளித் தொழில் முனைவோருடன் அமர்ந்து பேச வேண்டும்.
இதையடுத்து ஒரு இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிச் செல்ல வேண்டும். புதிய ஜவுளிக் கொள்கையில், ஜவுளித் துறை நீண்ட காலத்துக்கு பயணிப்பதற்கு என்னென்ன இடம் பெற வேண்டும் என்பதை எங்களைப் போன்ற தொழில் அமைப்புகள் ஏற்கெனவே தொகுத்து தயாராக வைத்திருக்கிறோம். அவற்றை ஒருங்கிணைத்து குறைந்தபட்சம் அடுத்த 3 ஆண்டுகளுக்கான செயல் திட்டமாக உருவாக்க தொழில் துறை மூலம் ஐ.ஏ.எஸ். நிலையிலான அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும்.
சீனா போன்ற போட்டி நாடுகளில் தொழிலாளர் பிரச்னை போன்றவை நிலவும் இந்த காலகட்டத்தில், தமிழக அரசு புதிய ஜவுளிக் கொள்கையை வகுத்தால், அது சர்வதேச அளவில் சீனாவின் இடத்தைப் பிடிக்கும் முயற்சிக்கு ஏதுவாக இருக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.