வர்த்தகம்

ஜிஐசி -ஆர்.இ. நிறுவனம் ரூ.11,370 கோடிக்கு பங்கு விற்பனை

DIN

மத்திய அரசுக்கு சொந்தமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ரீஇன்சூரன்ஸ் (ஜிஐசி -ஆர்.இ.) நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.11,370 கோடியை திரட்ட உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஆலிஸ் ஜி வைத்யன் தெரிவித்துள்ளதாவது:
ஜிஐசி -ஆர்.இ. நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இந்திய பங்கு சந்தை வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய பங்கு விற்பனையாக அமையும். ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை ரூ.855-ஆகவும் அதிகபட்ச விலை ரூ.912-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பங்குகள் அனைத்தும் அதிகபட்ச விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கோல் இந்தியா நிறுவனம் பொது பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.15,000 கோடி திரட்டியதற்கு பிறகு இரண்டாவது மிகப்பெரிய பொதுப் பங்கு விற்பனையாக இது அமையும்.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 14.22 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதில், மத்திய அரசுக்கு சொந்தமான 12.26 சதவீத பங்குகளும், நிறுவனத்துக்கு சொந்தமான 1.96 சதவீத பங்குகளும் அடங்கும். அதன்படி ஜிஐசி -ஆர்.இ. நிறுவனத்துடைய 1.72 கோடி பங்குகளும், மத்திய அரசுக்கு சொந்தமாகவுள்ள 10.75 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
வரும் அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கவுள்ள இப்பங்கு வெளியீடு 13-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்றார் அவர்.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிஐசி -ஆர்.இ. நிறுவனம் ரூ.390 கேடி நிகர லாபம் ஈட்டியது. இருப்பினும், கடந்த நிதி ஆண்டில் ஈட்டிய ரூ.704 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான தொகையே ஆகும். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிக இழப்பு ஏற்படும் என்ற நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக அளவிலான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று ஆலிஸ் வைத்யன் மேலும் தெரிவித்தார்.
இந்தப் பங்கு வெளியீட்டை ஆக்ஸிஸ் கேபிட்டல், சிட்டி குரூப், டச் இந்தியா, ஹெச்எஸ்பிசி செக்யூரிட்டிஸ் மற்றும் கோட்டக் கேபிட்டல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன.
அடுத்த நிதி ஆண்டில் லாயிட்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதன் மூலம் உலகின் 10-ஆவது பெரிய ரீஇன்சூரன்ஸ் நிறுவனமாக ஜிஐசி -ஆர்.இ. திகழ உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT