வர்த்தகம்

கரடியின் பிடியில் பங்குச் சந்தைகள் சிக்கித் தவித்த வாரம்

DIN

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கரடியின் பிடியில் இரண்டாவது வாரமாக சிக்கித் தவித்தன.
அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதால் பணவீக்கம் உயரக்கூடும் என பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. இதன் தாக்கம் உலக நாடுகளின் பங்குச் சந்தைகளில் கடந்த சில நாள்களாக எதிரொலித்து வருகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் வார அளவிலான வர்த்தகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான சரிவைச் சந்தித்தது.
இந்தியாவைப் பொருத்தவரையில், மத்திய பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்து வருகிறது. உலக நாடுகளின் சந்தைகளில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையை கண்ட முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறுவதையே பாதுகாப்பானது என கருதியதால் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் பங்கு வர்த்தகம் கடந்த வாரத்தில் பெரும் சரிவை சந்தித்தன. 
கடந்த வார வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.7,380.26 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று சந்தைகளை விட்டு வெளியேறியதாக செபி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கை ஆய்வறிக்கையில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேசமயம், அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, வங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகபட்சமாக 35.67 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து, பொறியியல் சாதனங்கள் 3.51 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 3.02 சதவீதமும், தொழில்நுட்பம் 2.73 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 1.48 சதவீதமும் சரிந்தன.
அதேசமயம், தேவை அதிகரித்ததையடுத்து ரியல் எஸ்டேட் 2.13 சதவீதமும், மருந்து, 1.99 சதவீதமும், ஐபிஓ துறை நிறுவனப் பங்குகளின் விலை 1.22 சதவீதமும் உயர்ந்தன.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில், கடந்த வாரத்தில் 25 பங்குகளின் விலை சரிந்தும், 6 பங்குகளின் விலை அதிகரித்தும் காணப்பட்டன.
யெஸ் வங்கி பங்கின் விலை 6.99 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி. 6.84 சதவீதமும், லார்சன் 6.01 சதவீதமும், டிசிஎஸ் 5.62 சதவீதமும், விப்ரோ 5.44 சதவீதமும், இன்டஸ்இண்ட் வங்கி 5.74 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி 4.94 சதவீதமும், அதானிபோர்ட் 4.29 சதவீதமும் இழப்பைக் கண்டன.
அதேசமயம், முதலீட்டாளர்களின் வரவேற்பையடுத்து, ஸன் பார்மா பங்கின் விலை 5.72 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 3.43 சதவீதமும், கோல் இந்தியா 2.84 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்கின் விலை 2.08 சதவீதமும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,060 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 34,005 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 305 புள்ளிகள் சரிந்து 10,454 புள்ளிகளில் நிலைத்தது.
கடந்த இரு வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 2,044 புள்ளிகளையும் (5.76%), நிஃப்டி 614 புள்ளிகளையும் (5.63%) இழந்துள்ளன.
கடந்த வாரம், மும்பை பங்குச் சந்தையில் ரூ.24,106.99 கோடி மதிப்புக்கும், தேசிய பங்குச் சந்தையில் ரூ.1,76,449.69 கோடி மதிப்புக்கும் வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT