வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 286 புள்ளிகள் இழப்பு

DIN

இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 286 புள்ளிகள் சரிவைக் கண்டது.
சர்வதேச சந்தை நிலவரங்கள் சாதகமாக இருந்ததன் எதிரொலியால், இந்திய பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இருப்பினும், கச்சா எண்ணெய் அதிகரிப்பால், சென்ற ஜனவரியில் வர்த்தக பற்றாக்குறை 1,630 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது முதலீட்டாளர்கள் மத்தியில் சுணக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும், பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ரூ.11,400 கோடி மோசடி புகார் பங்குச் சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்னும் பிற வங்கிகளிலும் இந்த மோசடி நடைபெற்றிருக்கக்கூடும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
கடன் மோசடியில் சிக்கித் தவித்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடந்த மூன்று நாள்களில் மட்டும் ரூ.8,700 கோடி அளவுக்கு சந்தை மூலதன இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டியில் இடம்பெற்றுள்ள பொதுத் துறை வங்கிகளின் குறியீட்டெண் 2.49 சதவீதம் சரிந்தது. குறிப்பாக, பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை 1.84 சதவீதமும், பேங்க் ஆஃப் பரோடா 3.55 சதவீதமும் இழப்பை சந்தித்தன. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை 1.25 சதவீதமும், பஞ்சாப் நேஷனல் வங்கி 2.10 சதவீதமும் குறைந்தன. கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன பங்கின் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள எஸ்பிஐ பங்கின் விலை 2.55 சதவீதமும், யெஸ் வங்கி பங்கின் விலை 2.52 சதவீதமும் சரிந்தன. இவை தவிர, ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுஸýகி, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், எல்&டி, இன்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலையும் 2.31 சதவீதம் வரை இழப்பைச் சந்தித்தன.
அதேசமயம், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் பங்குகளின் விலை 0.96 சதவீதம் வரை உயர்ந்தன.
துறைகளைப் பொருத்தவரையில், மோட்டார் வாகன துறை குறியீட்டெண் 1.65 சதவீதமும், உலோகம் 1.58 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 1.57 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.44 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 1.33 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 1.19 சதவீதமும், வங்கி 1.17 சதவீதமும் சரிவைக் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 286 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 33,957 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 93 புள்ளிகள் சரிந்து 10,452 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT