வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர் மந்த நிலை

DIN

சாதகமற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மந்த நிலையே காணப்பட்டது. 
காலையில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் தொடங்கிய போதிலும், அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மற்றும் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு, நீண்டகால மூலதன ஆதாய வரி அறிமுகம் உள்ளிட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டனர். பெரும்பாலான சில்லறை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். 
ஐரோப்பிய சந்தைகளில் காணப்பட்ட சரிவு, 'ஒபெக்' மற்றும் ரஷிய நாடுகளின் உற்பத்தி குறைப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் ஆகிய உலக நிகழ்வுகளும் இந்திய பங்கு வர்த்தகத்தில் சாதகமற்ற சூழலை உருவாக்கின.
இதன் காரணமாக, சுத்திகரிப்பு, உருக்கு, சிமெண்ட் உள்ளிட்ட முக்கிய துறைகளின் உற்பத்தி சென்ற நவம்பரில் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு 6.8 சதவீதமாக அதிகரித்திருந்ததாக புள்ளிவிவரங்கள் வெளியான போதிலும், அது இந்திய பங்குச் சந்தைகளுக்கு வலு சேர்ப்பதாக அமையவில்லை.
மும்பை பங்குச் சந்தையின் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் குறியீட்டு எண் 0.95 சதவீதம் சரிந்தது. இதனைத் தொடர்ந்து, மருந்து 0.73 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 0.57 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 0.51 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 0.43 சதவீதமும், தொழில்நுட்பம் 0.43 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்களின் குறியீட்டு எண் 0.35 சதவீதமும் குறைந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், பார்தி ஏர்டெல் பங்கின் விலை அதிகபட்சமாக 2.24 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. பொதுத் துறை நிறுவனங்களான பிபிசிஎல் பங்கின் விலை 2.12 சதவீதமும், ஹெச்பிசிஎல் பங்கின் விலை 1.98 சதவீதமும், ஐஓசி 0.83 சதவீதமும் சரிந்தன.
இவற்றைத் தொடர்ந்து, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், ஐடிசி, அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்ஃபோசிஸ், யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி பங்குகளும் முதலீட்டாளர்களின் வரவேற்பில்லாத காரணத்தால் குறைந்த விலைக்கு கைமாறின.
அதேசமயம், ஓஎன்ஜிசி பங்குகளின் விலை 2.36 சதவீதமும், கோல் இந்தியா 1.46 சதவீதமும், என்டிபிசி 1.19 சதவீதமும், இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை 1.15 சதவீதமும் உயர்ந்தன. இவைதவிர, ஹெச்டிஎஃப்சி நிறுவனம், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளுக்கும் சந்தையில் ஓரளவுக்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 0.49 புள்ளிகள் குறைந்து 33,812 புள்ளிகளில் நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 6 புள்ளிகள் சரிந்து 10,442 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT