வர்த்தகம்

பங்குச் சந்தைகளில் மந்த நிலை வாரம்

தினமணி

இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக மந்த நிலை நிலவியது.
 அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு படிப்படியாக சரிவைக் கண்டதால் கடந்த வார வர்த்தகத்தில் அதிக ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டன. வார இறுதியில் ரூபாய் மதிப்பு சற்று உயர்ந்ததையடுத்து சந்தைகள் பெரும் சரிவிலிருந்து தப்பின.
 சர்வதேச சூழலைப் பொருத்தவரையில், சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் பன்னாட்டு சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இந்திய சந்தைகளில் வாரத்தின் முதல் இரண்டு தினங்களில் உணரப்பட்டது.
 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீது அதிக வரிகளை விதிக்கவுள்ளதாக மிரட்டல் விடுத்தது மற்றும் அமெரிக்க ரிசர்வ் வங்கி இம்மாதத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை பங்குச் சந்தைகளுக்கு சாதகமான அம்சமாக இல்லை. இதனால், லாப நோக்கம் கருதி அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார நிலை குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக செய்தி வெளியானது. இதையடுத்து, ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து வார இறுதியில் பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து ஓரளவுக்கு மீண்டன. மேலும், நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளதாக வெளியான செய்தியும் மீட்சிக்கு துணைபுரிந்தன.
 மோட்டார் வாகன துறை பங்குகள் அதிகபட்சமாக 1.85 சதவீதம் சரிவை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து, ஐபிஓ, வங்கி, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய்-எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், மருந்து, ரியல் எஸ்டேட், பொதுத் துறை நிறுவனங்களின் குறியீட்டெண்களும் பின்னடைவைக் கண்டன.
 அதேசமயம், மின்சாரம், உலோகம், பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டெண்கள் உயர்வைக் கண்டன.
 சென்செக்ஸ் கணக்கிட உதவும் 31 நிறுவனங்களுள் 20 பங்குகளின் விலை சரிந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் காணப்பட்டன.
 நிறுவனங்களைப் பொருத்தவரையில் சென்செக்ஸில் ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை அதிகளவாக 4.22 சதவீதம் சரிவை சந்தித்தது. அதைத் தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 3.98 சதவீதமும், கோல் இந்தியா 2.96 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் டிவிஆர் 2.67 சதவீதமும், மஹிந்திரா அண்டு மஹிந்திரா 2.36 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 2.06 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.88 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.83 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 1.57 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி 1.39 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 1.38 சதவீதமும் இறக்கம் கண்டன.
 அதேசமயம், என்டிபிசி நிறுவனப் பங்கின் விலை 3 சதவீதமும், பவர் கிரிட் 2.07 சதவீதமும், வேதாந்தா 1.93 சதவீதமும், விப்ரோ 1.88 சதவீதமும், ஏஷியன் பெயின்ட்ஸ் 1.04 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 0.78 சதவீதமும், எல் & டி 0.75 சதவீதமும் ஏற்றத்தைக் கண்டன.
 மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 299 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 38,090 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.12,749.28 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 73 புள்ளிகள் சரிந்து 11,515 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,36,353.38 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT