வர்த்தகம்

பறிபோன ரயில் சில்லறை விற்பனையாளர்களின் வாழ்வாதாரம்!

DIN

ரயில்களில் மட்டுமின்றி ரயில் நிலையங்களிலும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதன் மூலம், லட்சக்கணக்கான உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பறிபோய் உள்ளது.
 ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தொலைதூர விரைவு ரயில்களில் சமையல் கூடத்துடன் (பேண்ட்ரி கார்) கூடிய பெட்டி இணைக்கப்பட்டு, ரயில் பயணிகளுக்கான உணவு தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த பணியையும் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டது ரயில்வே நிர்வாகம். உணவு தரம் மற்றும் கட்டண விவரங்களுடன் கூடிய ஒப்பந்த அடிப்படையில் அதற்கான அனுமதி தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது.
 சமையல் கூடத்துடன் கூடிய ரயில் பெட்டி வசதியில்லாத ரயில்களில், குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் உணவுப் பொருள்களை ஏற்றிக் கொண்டு, அதனை விநியோகிக்கும் வகையிலும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் பணிகளில் பெரும்பாலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 அதேபோல், ரயில் நிலையங்களில் கடைகள் அமைத்து உணவுப் பொருள்கள் விற்பனை செய்வதற்கான அனுமதியும் ஏல முறையில் தனியார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களே வெவ்வேறு நபர்களின் பெயர்களில் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
 இந்த கடைகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ரயில் நிலைய நடைமேடைகளில் உணவுப் பொருள்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்களில் பயணித்து பரபரப்பாக வியாபாரம் செய்து, வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த பல லட்சம் உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
 வாழ்வாதாரம் பாதிப்பு
 உணவுப் பண்ட விற்பனையாளர்களுக்கு மாதாந்திர சலுகை பயணச்சீட்டுக்கும் குறைவான கட்டணத்தில் ரயில்வே நிர்வாகம் சலுகை பயணச்சீட்டுகளை நீண்ட காலமாக வழங்கி வந்தது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகக் குறைந்த கட்டணத்தில் (ரூ.100 முதல்) உணவுப் பண்டங்கள் விற்பனை செய்வதற்கான உரிமத்தையும் வழங்கி வந்தது.
 இந்நிலையில் வருமானம் ஈட்டும் வழிமுறைகள் என்ற போர்வையில், சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட ரயில்வே நிர்வாகம் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருள் விற்பனை உரிமத்தை ரத்து செய்துவிட்டது. இதனால் தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சில்லறை விற்பனையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.
 இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரயில் பயணி நல்லசாமி கூறியது:
 அதிக தொகைக்கு ஏலம் என்பதை மட்டுமே கருத்தில் கொள்ளும் ரயில்வே நிர்வாகம், பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்து உறுதிப்படுத்துவதில்லை. அதேபோல் ரயில் நிலையக் கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்வதில்லை. விரும்பும் உணவுப் பொருள்களை வாங்க முடியாமல், கிடைப்பதை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் ஏமாற்றமடைவது பயணிகள் தான் என்றார்.
 - ஆ. நங்கையார் மணி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT