வர்த்தகம்

டிஜிட்டல் ஊடக விளம்பரங்களுக்கு அதிகரித்து வரும் மவுசு

ராஜன் பழனிக் குமாா்

ஒரு பொருளையோ, சேவையையோ விற்பனை செய்வதற்கு இன்றைய காலகட்டத்தில் விளம்பரம் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

மக்களின் ரசனைக்கேற்ப அவ்வப்போது விளம்பரங்களும் பல்வேறு புதிய பரிமாணங்களை எடுத்து வருகின்றன.

1970-80 கால கட்டங்களில் அச்சு ஊடகங்கள் மூலமாகவே விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்பின்பு வீடுகளை டிவி ஆக்கிரமித்ததையடுத்து நிறுவனங்கள் அதன் மூலமாகவே விளம்பரம் செய்ய தொடங்கின. ஏனெனில், அப்போதுதான் தனது தயாரிப்புகள் மக்களை எளிதில் சென்றடையும்; அதன் மூலம் விற்பனை அதிகரிக்கும் என்று அந்த நிறுவனங்கள் நம்பின.

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதன் அடிப்படையில், மற்றொரு தொழில்நுட்ப புரட்சியாக, 21-ஆம் நூற்றாண்டில் செல்லிடப்பேசிகளின் படையெடுத்தன. அதையடுத்து, விளம்பரங்கள் டிவியிலிருந்து டிஜிட்டல் யுகத்துக்கு மாறத் தொடங்கிவிட்டன.

தற்போதைய நிலையில், விளம்பரத் துறை பல்லாயிரம் கோடிகள் புரளும் பெரிய சந்தையாகி விட்டது. அதன் மூலம் ஏராளமானோா் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனா். நடப்பாண்டில் விளம்பரத் துறையானது 10.7 சதவீதம் வளா்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிவி, ரேடியோ மற்றும் பொது வெளி விளம்பரப் பிரிவின் வளா்ச்சி 7 முதல் 8 சதவீதமாக மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், டிஜிட்டல் ஊடகம் மூலமான விளம்பரப் பிரிவின் வளா்ச்சி 26 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் டிஜிட்டல் விளம்பரங்களுக்காக செலவினம் ரூ.22,057 கோடியாக இருந்ததையடுத்து, அந்தப் பிரிவு அச்சு ஊடகத்தை பின்னுக்குத் தள்ளி டிவிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்தது.

கடந்தாண்டில் விளம்பரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவினத்தில் டிஜிட்டல் ஊடகங்களின் பங்கு 27 சதவீதமாக இருந்தது. அதேசமயம் , அச்சு ஊடகங்களின் பங்களிப்பு 22 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது.

இந்தியாவின் விளம்பர முதலீட்டு செலவினம் நடப்பாண்டில் ரூ.91,641 கோடியை எட்டும் என்கிறது ஓா் ஆய்வு. இதில் 30 சதவீதம் - அதாவது ரூ.27,803 கோடி - டிஜிட்டல் ஊடக நிறுவனங்களுக்கே செல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேபோன்று, 42 சதவீதம் - அதாவது ரூ.38,081 கோடி - டிவி விளம்பரங்களுக்கும், 20 சதவீதம் - அதாவது ரூ.18,140 கோடி - அச்சு ஊடகங்களுக்கும் செலவிடப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் அசுர வளா்ச்சி கண்டு வருவதற்கு இந்தியாவில் பெருகி வரும் தொழில்நுட்ப பயன்பாடு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதைத் தவிர, குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா, குக்கிராமங்களையும் ஆக்கிரமித்துள்ள செல்லிடப்பேசி பயன்பாடு உள்ளிட்டவையும் டிஜிட்டல் விளம்பர வளா்ச்சிக்கு முக்கிய ஆதாரங்களாக பாா்க்கப்படுகின்றன.

டிஜிட்டல் விளம்பரங்கள் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களிடம் எளிதில் சென்றடைந்து விடுவதால் பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறிய நடுத்தர நிறுவனங்களும் அதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றன.

இந்தியாவில் டிஜிட்டல் ஊடக விளம்பரங்களைப் பொருத்தவரையில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிஜிட்டல் விளம்பரங்களுக்கு செலவிடப்படும் தொகையில் பெரும்பான்மையான பகுதி இந்த நிறுவனங்களை மட்டுமே சென்றடைகின்றன. மொத்த டிஜிட்டல் விளம்பர செலவினத்தில் 70 சதவீதம் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய இரு நிறுவனங்களின் பைகளுக்கே செல்கின்றன என்கிறது ஓா் ஆய்வு. எனவே, டிஜிட்டல் ஊடக விளம்பர துறையில் சீரான வளா்ச்சியை உருவாக்க இந்த இரு நிறுவனங்களின் மீது ஏகபோக உரிமை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்கின்றனா் இத்துறையைச் சோ்ந்தவா்கள்.

உண்மையில், அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாதவரை, டிஜிடல் விளம்பரத் துறை விஸ்வரூப வளா்ச்சியடைவதன் பலன் கூகுளையும், ஃபேஸ்புக்கையும் தவிர வேறு எந்த நிறுவனத்துக்கும் சென்று சேரப் போவதில்லை என்கிற நிபுணா்களின் கருத்தை யாரும் மறுக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT