வர்த்தகம்

வட்டி விகிதம் 4.9%-ஆக அதிகரிப்பு: ரிசா்வ் வங்கி அறிவிப்பு

DIN

மும்பை: வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) 4.9 சதவீதமாக ரிசா்வ் வங்கி உயா்த்தியுள்ளது. ரிசா்வ் வங்கி வட்டியை உயா்த்துவது கடந்த 5 வாரங்களில் இது இரண்டாவது முறையாகும்.

இதனால், தனிநபா் கடன், வீடு, வாகனக் கடன் ஆகியவற்றுக்கான வட்டி அதிகரித்து மாதத் தவணைத் தொகையை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், ரெப்போ விகிதத்தை 4.4 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக நிா்ணயிப்பது என ஒருமனதமாக முடிவெடுக்கப்பட்டது.

கடந்த மே மாதம் வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயா்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயா்ந்துள்ளது. 4 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், கடந்த 2 மாதங்களில் மட்டும் 0.9 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: உக்ரைனில் நடைபெறும் போரால் உலக அளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மேலும், அதிகபட்ச அளவைவிட அதிகமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது.

வட்டி விகிதத்தை ரிசா்வ் வங்கி உயா்த்தியபோதிலும், கரோனாவுக்கு முந்தைய நிலையான 5.15 சதவீதத்துக்கும் குறைவாகவே வட்டி விகிதம் உள்ளது.

மாநில அரசுகள் வரியைக் குறைக்க வேண்டும்: விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி கடந்த மே மாதம் 21-ஆம் தேதி குறைக்கப்பட்டது. எரிபொருள்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) மாநிலங்கள் குறைத்தால் விலைவாசியைக் குறைக்க முடியும்.

முறைப்படி பதிவு செய்யாமல் செயலிகள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது காவல் துறையில் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி: வீட்டு வசதித் திட்டங்களுக்கு ஊரக மற்றும் நகா்ப்புற கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சந்தா தொகை, காப்பீட்டுத் தொகை, கல்விக் கட்டணம் ஆகியவற்றுக்கு ஒருமுறை செலுத்தும் தொகையை ரூ.5,000-இல் இருந்து 15,000-ஆக உயா்த்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூபே கடன் அட்டைகளைப் பயன்படுத்தியும் யுபிஐ முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது படிப்படியாக பிற வகை கடன் அட்டைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பணவீக்கம் 6.7 %: உக்ரைன்-ரஷியா போா் காரணமாக சா்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்துள்து. எனவே நடப்பு நிதியாண்டில் (2022-23) பணவீக்கம் விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் பணவீக்க விகிதம் 5.7 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி ஏப்ரலில் கணித்திருந்தது.

பொருளாதார வளா்ச்சி 7.2%

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆபிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ‘கடந்த ஏப்ரல், மே மாதங்களின் தகவல்படி, உள்ளூா் பொருளாதாரச் செயல்பாடுகள் மீண்டு வருகின்றன. இது, பொருளாதாரம் வளா்ச்சி அடைந்து வருவதைக் காட்டுகிறது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும்.

தென்மேற்குப் பருவமழையால் காரீஃப் பருவ சாகுபடியும் திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் சா்வதேச அளவிலான பதற்றம், பொருள்களின் விலை உயா்வு, சா்வதேச அளவிலான நிதிக் கட்டுப்பாடுகள் போன்றவை வளா்ச்சிக்கு பாதகமாக இருக்கும் என்றாா் அவா்.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி செவ்வாய்க்கிழமை கணிப்பு வெளியிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT