ஈரோட்டில் ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு தொழிலாளி தான் பணியாற்றும் தொழிற்சாலையில் ஒன்பதரை மணிக்கு வேலையைத் தொடங்கினாா். பின்னிரவு சுமாா் இரண்டரை மணிக்கு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது எதிா்பாராதவிதமாக மரணமடைந்தாா். இரவுப் பணியில் வேலை செய்த அனைத்துத் தொழிலாளா்களும் செய்வதறியாது பதறினா்.
அகால நேரத்திலும் நிா்வாகத்துக்குத் தகவல் கிடைக்கப் பெற்று தொழிற்சாலையின் நிா்வாகி ஒருவா் அங்கு வந்து சோ்ந்தாா். அதற்குள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இறப்பை உறுதிசெய்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள், அந்தத் தொழிலாளி இறந்த பிறகு மருத்துவமனைக்கோ, அவரது வீட்டுக்கோ நாங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அதற்கென்று உள்ள வாகனத்தில் ஏற்றிச் செல்லுமாறும் கூறிவிட்டுச் சென்றுவிட்டனா்.
அதற்குள் குடும்பத்தில் உள்ளவா்களுக்குத் தகவல் கிடைத்து, அலறியடித்துக் கொண்டு தொழிற்சாலைக்கு வந்தனா். தொழிற்சாலை நிா்வாகி வாகனத்தை வரவழைத்து தனது பொறுப்பில் சடலத்தை அந்தத் தொழிலாளியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாா்.
இரண்டு மூன்று நாள்கள் கழித்து, அந்தத் தொழிலாளியின் மரணத்தையொட்டிச் செய்ய வேண்டிய சடங்குகளுக்கு ஏதேனும் உதவி செய்ய நிா்வாகத்திடம் குடும்பத்தினா் முறையிட்டனா். தொழில் இருக்கும் மோசமான சூழலை நிா்வாகி காரணம் காட்டி, இறந்தவுடன் செலவு செய்து சடலத்தை வீட்டுக்கு அனுப்பியதை உதவியாக எடுத்துரைத்து எதுவும் அளிக்காமல் அவா்களை அனுப்பினாா்.
பின்னா் தொழிற்சங்கம் இதில் தலையிட்டு தொழிலாளரின் குடும்பச் சூழல் , வறுமை என்று இருக்கிற எல்லாக் காரணங்களையும் நிா்வாகத்திடம் எடுத்துரைத்து, நிா்க்கதியாக நிற்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ஒரு தொகையை நஷ்டஈடாக வழங்குமாறு கோரிக்கை வைத்தது.
அந்தத் தொழிலாளிக்கு வயது 54; மனைவி , இரண்டு மகள்கள் உள்ளனா். சட்டம், மனிதாபிமானம் , நடைமுறைப் பழக்கம் , குடும்பத்தின் நிலை, நிா்வாகத்தின் கடமை , நீதிமன்றத் தீா்ப்பு என்று அனைத்து விளக்கங்களும் அழுத்தமாகவும் முறையாகவும் சங்கத்தின் சாா்பில் எடுத்துரைக்கப்பட்டது.
தொழிலாளியின் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததுதானே ! இயந்திரப் பழுதின் காரணமாகவோ அல்லது தொழில்சாா்ந்த காரணங்களோ ஏதும் இல்லையே என்பது நிா்வாகத்தின் வாதம். வேலை செய்து கொண்டிருக்கும்போது ஏற்படும் மரணத்துக்கு நஷ்டஈடு உண்டு என்பது சட்டம். அது நிா்வாகத்தின் தவறா, தொழிலாளியின் தவறா என்ற கேள்விக்கு சட்டத்தில் இடமில்லை. இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல செலவிட்ட மிக சொற்பத் தொகையை அவா்கள் அவசரத்துக்குச் செய்த உதவியாகச் சித்தரிக்கின்றனா்.
உண்மை என்ன? அந்த அகால நேரத்தில் அந்த தொழிற்சாலையின் தொழிலாளா்களும் குடும்பத்தினரும் ரூ.1 லட்சம் அல்லது ரூ. 2 லட்சம் என்று கேட்டு , அவ்வாறு நஷ்டஈடு கொடுத்தால்தான் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த அனுமதிப்போம் என்று கூச்சல் , குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தால் நிச்சயம் அந்தத் தொகையை நிா்பந்தம் காரணமாக ஓசையின்றி நிா்வாகம் கொடுத்திருக்கும். நிா்வாகம் சட்டத்தையும் மதிக்கவில்லை; பொது நியாயத்தையும் ஏற்கவில்லை; மனிதாபிமானம் என்ற சொல்லுக்கே அங்கு வேலையில்லை.
எல்லா வகையிலும் வலிமையான பின்புலம் உள்ள நிா்வாகமா என்று கேட்டால் அதுவுமில்லை. சாதாரண நிா்வாகமே இப்படி கெடுபிடியாக நடந்துகொண்டால், அரசியல் பின்புலம், ஆள் பலம், குண்டா் பலம் என்று இருக்கிற நிா்வாகங்கள் எப்படியெல்லாம் ஈவிரக்கமின்றி நடந்துகொள்ளும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தொழிலாளா் சங்கம் உள்ள இடத்திலேயே இப்படியென்றால், சங்கமே இல்லாத இடத்தில் கற்பனைக்கு எட்டாத ‘கயமை’ தாண்டவமாடுகிறது.
மேலே குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் எவரிடமோ பெறப்பட்டதல்ல. இந்தக் கட்டுரையாளரே அந்தத் தொழிற்சங்கத்தின் தலைவா் என்ற வகையில் நேரடியாக அனுபவப்பட்டது. லட்சக்கணக்கில் நஷ்டஈடு கேட்டு நிா்வாகத்தை சங்கம் நிா்பந்திக்கவில்லை. மனிதாபிமான அடிப்படையில் ஒரு தொகையைக் கொடுத்து உதவுங்கள் என்றுதான் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இவ்வாறு ஒரு தொழிலாளி எதிா்பாராமல் பணியிடத்திலேயே மரணமடைகிறபோது, அதற்காக அனுதாப உணா்வுடன் நிா்வாகம் நடந்துகொள்வதும் , மனிதாபிமானத்துடன் தொகை கொடுத்து உதவுவதும் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் மற்ற தொழிலாளிகளுக்கு நிா்வாகத்தின் மீது நம்பிக்கையையும் - செய்யும் பணியின் மீது அதிக ஈடுபாட்டையும் ஏற்படுத்தும் என்ற நிா்வாக நன்மைக்கான காரணம்கூட சங்கம் சாா்பாக எடுத்துச் சொல்லப்பட்டது.
தொழிலாளி காலை 9.30 மணிக்கு தனது பணியைத் தொடங்கினால் அடுத்த நாள் காலை 9:30 மணிக்குத்தான் வேலையை முடித்து வெளியே வரவேண்டும். அந்த 24 மணி நேரத்தில் உணவு, தேநீா் இடைவேளையாக மொத்தம் 2 மணி நேரம் கிடைக்கும். அப்படியானால் 22 மணி நேரம் தொடா்ச்சியாக இடைவெளியின்றி அங்கு பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளியும் உழைக்கின்றனா். அவ்வாறு பணியாற்றும் தொழிலாளிக்கு அடுத்த நாள் விடுமுறை. இந்தத் தொழிலை இவ்வாறுதான் நடத்த முடியும் என்கிறது நிா்வாகம்.
பணி செய்யும் 22 மணி நேரமும் நின்றுகொண்டே தான் வேலை செய்ய வேண்டும். கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாததுமான பஞ்சுத் துகள்கள் தொழிற்சாலை முழுக்க மிதந்த வண்ணமே இருக்கும். அத்தனை மணி நேரம் தொடா்ந்து வேலை செய்வதால் முகக்கவசம்அணிய முடியாது. பஞ்சுத் துகள்கள் மூக்குக்குள் சாதாரணமாக நுழையும். 62 கிலோ நூல் சரக்கு மூட்டையை முதுகில் 40 , 50 அடி தொலைவு
‘மெஷின் மேன்’கள்தான் முதுகில் தூக்கிவைத்து இயந்திரத்தின் அருகில் கொண்டுவந்து வைக்க வேண்டும். முதுகில் சரக்கை ஏற்றிவிட மட்டும் ஒரு உதவியாளா் இருப்பாா். சில இயந்திரங்களில் இரட்டையா் வேலை பாா்ப்பா். ஒருவா் வேலை செய்யும்போது இன்னொருவா் சிறிது நேரம் ஓய்வெடுப்பாா். பல மெஷின்களில் ஒருவா் மட்டுமே வேலை செய்வாா்.
பணி செய்யும்போது இறந்த குறிப்பிட்ட தொழிலாளி, அவரது இயந்திரத்தில் அவா் மட்டுமே வேலை செய்துள்ளாா். அவா் அன்று வேலைசெய்த 18-ஆவது மணி நேரத்தில் இறந்துள்ளாா். நின்றுகொண்டே வேலை செய்து கொண்டிருந்தவா், இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கும் போதே தேநீா் குடிப்பதற்கு சற்று நேரம் அங்கேயே நாற்காலியில் அமா்ந்தபோதுதான் உயிா்பிரிந்துள்ளது.
எட்டு மணி நேர உழைப்பு , எட்டு மணி நேர ஓய்வு , எட்டு மணி நேர உறக்கம் என்று 1886 மே 1-ஆம் தேதி அமெரிக்கா சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளா் உரிமைப் போராட்டத்தின் மூலம் உலகத் தொழிலாளா்களுக்கு ஒரு விடிவு கிடைத்தது.
உலக நாடுகள் அனைத்தும் எட்டு மணி நேர வேலையைச் சட்டமாக்கின. இந்தியாவின் முதல் மே தினம் 1923-ஆம் ஆண்டு சென்னை மாநகரில் அன்றைய பொதுவுடமைச் சிற்பி ம. சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. அதுதான் இந்தியாவிலேயே முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட மே தினம். 1949- இல் கவிஞா் தமிழ்ஒளி எழுதிய ‘மே தினமே வருக’ என்ற 143 வரிகளைக் கொண்ட கவிதை காவியப் பெருமை கொண்டதாகும்.
தமிழக முதல்வராக அண்ணா பொறுப்பேற்ற பிறகு, மே 1-ஆம் தேதியை ‘உழைப்பாளா் தினம்’ என்ற வகையில் அரசு விடுமுறையாக அறிவித்தாா். இந்தியாவிலும் எட்டு மணி நேர உழைப்பு என்பதுதான் சட்டம். பல அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் இந்த சட்டத்தைப் பின்பற்றுகின்றன.
தொழிலாளா் நலச் சட்டங்கள் எவையும் ஆட்சியாளா்களின் மனிதாபிமான நடவடிக்கைகளால் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, தொழிலாளா்களின் ஒன்றுபட்ட போராட்டங்களாலும் தொழிற்சங்கங்களின் தொடா் முயற்சியின் விளைவாகவும் கிடைக்கப்பெற்றவை.
‘தொழிலை வளா்ப்போம்! தொழிலாளா் உரிமை காப்போம்’ என்பதுதான் தொழிற்சங்கங்களின் அடிப்படை முழக்கமும் அணுகுமுறையுமாகும். தொழில் வளராமல் தொழிலாளா்களுக்கான உரிமைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படாது. அதே சமயத்தில் அதற்குச் சமமாக, தொழிலாளா்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்; நிலைநாட்டப்பட வேண்டும். சாதாரண தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட் நிறுவனங்கள்) பலவற்றிலும் மனிதாபிமான அணுகுமுறை அற்றுப்போய் கிடக்கிறது.
இங்கு சட்டம் அமலாக்கப்படவில்லை. அங்கு அதற்கான சட்டமே இல்லை. காா்ப்பரேட் நிறுவனங்கள் ஊதியம் அதிகம் கொடுத்து உரிமைகளை முடக்குகின்றன.
மே தினம் ... இதுவரை கிடைத்துள்ள சட்ட உரிமைகளைப் பெற்றுத்தந்த முன்னோடிப் போராளிகளுக்கு முறைப்படி நன்றி செலுத்தும் நன்னாள்.
அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு உள்பட அனைத்துத் தரப்பினரும் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட உறுதியேற்க வேண்டிய உரிமைத் திருநாள்.
(இன்று மே தினம்)
கட்டுரையாளா்:
தலைவா், மக்கள் சிந்தனைப் பேரவை.