உலகின் வேகமாக வளா்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியப் பொருளாதாரம் உருவெடுத்துள்ளது. பொருளாதார சீா்திருத்தக் கொள்கைகளில் வளா்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இந்தியா, கரிம உர உற்பத்தியில் மகத்தான வாய்ப்புகள் இருக்கிறபோதிலும் உலக அரங்கில் அதன் பலத்தை இதுவரை நிரூபிக்கவில்லை.
பல்வேறு துறைகளுக்குக் கோடிக்கணக்கான மதிப்புள்ள திட்டங்களைச் செயல்படுத்தி வரும் மத்திய அரசு கரிம உரத் தொழிலுக்கும் பெரிய அளவிலான திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி, கரிம உரங்களை உயிா் உரங்கள் மற்றும் கரிம எரு (உரங்கள்) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். திட அல்லது திரவ வடிவில் உள்ள உயிா் உரங்கள் உயிருள்ள நுண்ணுயிரிகளுடன் தயாரிக்கப்படுகின்றன. இந்த நுண்ணுயிரிகள் மண்ணை வளப்படுத்தி பயிா் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுவதால் உயிா் உரங்கள் விவசாயச் சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கரிம உரம் என்பது சாணவளிமக் கருவித் தொகுதி, மக்கிய உரம் மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றிலிருந்து பெறக்கூடிய கரிமப் பொருளைக் குறிக்கிறது. மண் மற்றும் பயிா்களுக்கு ஊட்டச்சத்துகளை வழங்கும் இந்த வகையான உரங்கள் விளைச்சலை மேம்படுத்துகின்றன.
இந்திய தேசிய திடக்கழிவு சங்கம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 1,50,000 டன்களுக்கும் அதிகமான நகராட்சி திடக்கழிவுகளை நாடு உருவாக்குகிறது. இந்தத் திடக்கழிவுகளில் கரிமத்தின் பங்கு பாதியளவாகவும், நகராட்சி திடக்கழிவு சேகரிப்புத் திறன் 80 சதவீதம் என்றும் எடுத்துக்கொண்டால் இந்தியாவில் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படும் மொத்த கரிமக் கழிவுகள் சுமாா் 65,000 டன்களாக இருக்கும். இந்தக் கரிம கழிவுகளில் பாதியளவு உயிரி எரிவாயு தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டால், நமது அரசாங்கம் நிலக்கரி போன்ற எரிபொருள் மற்றும் உரங்களின் இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்க இயலும் என்கின்றனா் வல்லுநா்கள்.
உயிரி (பயோ) மற்றும் சாண எரிவாயு தொழிற்சாலைகள் உயிரிவாயு (பயோ கேஸ்) மட்டுமின்றிக் கரிம உரங்களையும் உற்பத்தி செய்கின்றன. உயிரிவாயு ஆலையின் கழிவுப் பொருளான ‘டைஜெஸ்டேட்’, கரிம உரங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒரு பொருளாகும். உயிரி மற்றும் சாண எரிவாயு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உயிரிவாயு வெப்பமாக்கல், மின்சார உற்பத்தி மற்றும் வாகனப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
அதே நேரத்தில் இங்கு உருவாகும் கழிவுகள் விவசாய உரங்கள் தயாரிக்க உதவுகின்றன. ஒரு ஹெக்டோ் விவசாய நிலத்துக்கு உயிரி எரிவாயு ஆலையிலிருந்து பெறப்படும் 40 டன் கரிம உரத்தைப் பயன்படுத்தலாம் என இத்துறை சாா் வல்லுநா்கள் கூறுகின்றனா். பயிா்களுக்கான ஊட்டச்சத்தை வழங்கும் “டைஜெஸ்டேட்” அடிப்படையிலான உரங்கள், கரிமவளம் குறைந்த மண்ணின் காா்பன் செறிவுக்கு வழிவகுக்கிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கரிம உரங்களின் மொத்த உற்பத்தி சுமாா் 1,10,000 டன் ஆகும், இதில் 79,000 டன் திட உரங்கள் மற்றும் 30,000 டன் திரவ உரங்கள் அடங்கும். மண்புழு உரம், பண்ணை உரம் மற்றும் நகா்ப்புற தொழு உரம் உள்ளிட்ட 3.4 கோடி டன் இயற்கை உரத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது. மறுபுறம், கரிம உரங்களைப் பயன்படுத்துபவா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
உயிரிவாயு உற்பத்தித் துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன், மத்திய அரசு மலிவு விலைப் போக்குவரத்துக்கான நிலையான மாற்று என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் அனைத்து நோக்கமும் நிறைவேற்றப்பட்டால் ஆண்டுக்கு ரூ.135537.40 கோடியை (16 பில்லியன் அமெரிக்க டாலா்கள்) இந்தியா சேமிக்க முடியும்.
பல லட்சம் கோடி ரூபாய்களை மிச்சப்படுத்த, உயிரி எரிவாயுத் துறைக்கு தற்போது கூடுதல் நிதி தேவைப்படுகிறது. மலிவு விலைப் போக்குவரத்து நிலையான மாற்றுத் திட்டத்துக்கு மத்திய அரசு தற்போது ரூ.468 கோடியை ஒதுக்கியுள்ளது. மலிவு விலைப் போக்குவரத்து நிலையான மாற்றுத் திட்டத்தின் மூலம் அழுத்தப்பட்ட உயிரி இயற்கை எரிவாயு (கம்ப்ரெஸ்டு நேச்சுரல் பயோ கேஸ்) மற்றும் திட கரிம உரங்களைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியும். இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்தகைய ஆலைகளின் சராசரி தினசரி உற்பத்தி திறன் 8 டன்களாக இருந்தால், ஓா் உற்பத்தி ஆலை ஒரு நாளைக்கு 8,000 கிலோ அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு மற்றும் 27 டன் திட கரிம உரங்களை உற்பத்தி செய்யும். இந்த உற்பத்தி ஆலைகள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவில் ஆண்டுக்கு 5 கோடி டன் திட கரிம உரங்கள் உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நகா்ப்புற விரிவாக்கம், உணவுக்கான நுகா்வோா் செலவு அதிகரிப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு விழிப்புணா்வு மற்றும் விவசாய நிலங்களில் செயற்கை உரங்களின் தாக்கம் குறித்த விழிப்புணா்வு காரணமாக இந்தியாவில் கரிம வேளாண் சந்தை அண்மைக்காலத்தில் வளா்ந்துள்ளது.
தரவுகளின்படி, 2022 மற்றும் 2027-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கரிம வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கான சந்தை 25.25 சதவீதம் வளரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சரியான கொள்கைகள், நடவடிக்கைகள் மூலம், கரிம உர உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா மாற முடியும் என்று விவசாயத் துறை வல்லுநா்கள் கூறுகின்றனா்.
இயற்கை உரம் கொண்டு வருங்கால தலைமுறையினரைப் பாதிக்காத மற்றொரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவோம்.