படம் | ஐஏஎன்எஸ்
நடுப்பக்கக் கட்டுரைகள்

படைப்பாற்றலை பாதிக்குமா ஏ.ஐ. தொழில்நுட்பம்?

வளரிளம் தலைமுறையினர் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை எப்போதும் சார்ந்திருப்பதைக் குறைத்து, தன் சுயசிந்தனை சக்தியை வளர்த்து, விமர்சன சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் படைப்பாற்றலில் தங்கள் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும்.

பாறப்புறத் ராதாகிருஷ்ணன்

உலக மக்களிடையே அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்கவும், அறிவு தளத்தைப் பரிமாறிக் கொள்ளவும், வணிக வளர்ச்சியை இயக்குவதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) இன்றியமையாதது.

தகவல் தொழில்நுட்ப உலகில் நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டில் இந்தியா தொடர்ந்து தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை மேலும் மேம்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை சார்ந்த கல்வி நாடு முழுவதும் அதிகரிக்கும்.

இந்திய வணிகங்களில் 23 சதவீதத்தினர் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவைச் செயல்படுத்தியுள்ளதாகவும், நிகழாண்டில் 73 சதவீதத்தினர் செயற்கை நுண்ணறிவை விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளதாகவும் வணிக தொழில்நுட்ப அறிக்கை} 2024 தெரிவிக்கிறது.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனரும், உலகின் முதல் பணக்காரருமான எலான் மஸ்க் கடந்த 26.10.2025 அன்று விக்கிப்பீடியாவுக்கு போட்டியாக "குரோகிபீடியா' என்னும் இணையவழி கலைக்களஞ்சியத்தைத் தொடங்கியுள்ளார். "குரோக் மற்றும் குரோகிபீடியா.காமின் குறிக்கோள், உண்மை, முழு உண்மை மற்றும் உண்மையைத் தவிர வேறில்லை; நாம் ஒரு போதும் சரியானவர்களாக இருக்க முடியாது.

ஆனால், அந்த இலக்கை நோக்கிப் பாடுபடுவோம்' என தனது "எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மஸ்க். இது அவரது செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ்}ஏஐ}யை அடிப்படையாகக் கொண்டது.

"தொழில் துறையில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் எலான் மஸ்க் போன்ற கோடீஸ்வரர்கள் அதிக பணம் சம்பாதிப்பார்கள். ஆனால், சாதாரண மக்கள் கடுமையான வேலை இழப்பைச் சந்திப்பார்கள். சாதாரண மக்களின் கஷ்டங்களை தொழிலதிபர்கள் எப்போதும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதேவேளையில் கல்வி, சுகாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு நல்ல விஷயங்களைச் செய்யும் என 2024}ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களிடம் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த "பியூ' எனப்படும் சமூக அறிவியல் ஆராய்ச்சி மையம் அண்மையில் தெரிவித்துள்ளது. சுமார் 14% இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறார்கள் அல்லது படித்திருக்கிறார்கள்.

மேலும், 32 சதவீதம் பேர் அது குறித்து கொஞ்சம் படித்திருக்கிறார்கள். ஆனால், கணக்கெடுக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் இந்தப் பங்கு (46%) மிகக் குறைவாகவுள்ளது.

ஒரு மனிதனுக்கு, அவனது மனமே நண்பனாகவும், எதிரியாகவுமிருந்து அவனை இயக்குகிறது. புத்திசாலியான நமது மனம், இப்போது சிந்திக்கும் திறனை இழந்து அசாதாரண தொழில்நுட்பத்தையே நம்பியுள்ளது. மனிதனை இயக்கும் இத்தகைய தொழில்நுட்பக் கருவிகள், அவனுக்கே எதிரியாக இருப்பதை உணருவதில்லை. எனவேதான், விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவின் அறிவாற்றல் மனிதத் திறன்களை அரித்து, அவனது படைப்பாற்றலை நசுக்குவதாகத் தெரிவித்து வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு மனிதனின் அடிப்படை இயல்பு, நோக்கம் மற்றும் இருப்பு (இருத்தலியல்) ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாகவே பல வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இதன் விளைவு, நாம் எவ்வாறு அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தேர்வு செய்கிறோம் என்பதைப் பொருத்தது. செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனின் ஒரு வெளிப்புற கண்டுபிடிப்பு என்றாலும், விழிப்புணர்வுடன் அதை அணுகுவது, நமது மனதின் உள்ளொழுக்கமாகும்.

வளரிளம் தலைமுறையினர் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை எப்போதும் சார்ந்திருப்பதைக் குறைத்து, தன் சுயசிந்தனை சக்தியை வளர்த்து, விமர்சன சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் படைப்பாற்றலில் தங்கள் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும். செயற்கை நுண்ணறிவால் (ஏ.ஐ.) ஓர் ஓவியத்தை வரைய முடியும்; ஆனால், அதை வரைதலால் மனிதனுக்கு ஏற்படும் மகிழ்ச்சியையும், உணர்ச்சிகளையும், அனுபவிக்கும் வாய்ப்பையும் ஏ.ஐ. இழக்கச் செய்யும்.

"நமது சொந்த உணர்வுகளைவிட, கணினியால் பின்பற்றப்பட வேண்டிய செயல்முறை அல்லது விதிகளின் தொகுப்பை அதிகமாக நம்பத் தொடங்கியவுடன், நமது முடிவுகளை மட்டுமல்ல, மனிதகுலத்தின் அதிகாரத்தையும், ஆற்றலையும் இயந்திரத்திடம் ஒப்படைக்கிறோம்' என்கிறார் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர். எனினும், "உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப இந்தியா, செயற்கை நுண்ணறிவுத் திறனில் உலக நாடுகளுடன் போட்டியிட்டு முன்னேறி வருகிறது.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு ஆற்றலைப் பரவலாக்கும் வகையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.33 லட்சம் கோடி) மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையம் அமைக்க கூகுள் நிறுவனத்துடன் அந்த மாநில அரசு அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த மையம் அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படும் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு மையமாகும்.

அதோடு, கூகுளின் கடல்வழி இணைய கேபிள்களை நிலத்துடன் இணைக்கும் மையமும் விசாகப்பட்டினத்தில் இயங்கும். இந்தியாவை தொழில்நுட்பத்தின் பின் அலுவலகமாக கூகுள் கருதுவதில்லை. மாறாக, உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பியாகவே பார்க்கிறது.

உலகில் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் குறித்தான "உலக தெற்கத்திய உச்சிமாநாடு' 2026}ஆம் ஆண்டு பிப்ரவரி, 19}20ஆகிய தேதிகளில் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முன்னோட்டமாக இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு ஆளுகை வழிகாட்டுதல்களை மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த நவம்பர் 5}ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இது நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்குமான அணுகுமுறைகளை வகுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, "சாட்ஜிபிடி' போன்ற பெரிய மொழி மாதிரிகளை (லார்ஜ் லாங்குவேஜ் மாடல்ஸ்) பயன்படுத்துவதில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமாக வளர்ந்துவரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு மேம்பாடு தொழில்களையும், அந்நுண்ணறிவுக் கருவிகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்த செயற்கை நுண்ணறிவு ஆளுகை வழிகாட்டுதல் உருவாக்கும்.

"இந்தியாவின் குறிக்கோள், அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியுடன் உலகளாவிய போட்டித் தன்மைக்கேற்ப, செயற்கை நுண்ணறிவின் உருமாறும் திறனைப் பயன்படுத்துவதாகும். அதேசமயத்தில், தனி நபர்களுக்கும், சமூகத்துக்கும் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை நிவர்த்தி செய்வதுமாகும்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, பிரிட்டனிலுள்ள பிளெட்ச்லி பார்க், தென் கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற உச்சி மாநாடுகளில், அந்தந்த நாட்டு அரசுகள் பொதுவாக தங்கள் நாடுகளில் பெரிய மொழி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பரவலை நிர்வகிப்பதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன.

அதன் அடிப்படையில், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அனைவருக்கும் உகந்த கொள்கைகளை ஏற்படுத்தவும், பாதுகாப்பு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இந்த செயற்கை நுண்ணறிவு ஆளுகை வழிகாட்டுதல் வழிவகைகளை எடுத்துரைக்கின்றன. மேலும், "இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டமைப்புக்கு வெளியே, மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப விரைவான நடவடிக்கையை கோரினால், கடுமையான சட்டத்தை இயற்றுவது போன்ற விரைவான நடவடிக்கையை அரசு எடுக்கத் தயங்காது' என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதாரமாக மாறுவதால், அதற்கு உகந்த வியூகங்களை உருவாக்குவதும், நாடுகளிடையேயான போட்டித் தன்மைக்கு ஏற்ப அறிவியல் தொழில்நுட்பத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதும் அரசின் தார்மிகக் கடமையாகும்.

உலக நாடுகளின் செயற்கை நுண்ணறிவு ஆற்றலின் நுகர்வோராக இந்தியா மாறுமா அல்லது படைப்பாளராக, மையமாக மாறுமா என்பதை வருங்காலம் தீர்மானிக்கும்.

தொழில்நுட்பத்தின் ஆற்றல் ஒரு போதும் நாட்டின் உள்கட்டமைப்புகளால் கட்டுப்படுத்தப்படாமல், அதற்கு உத்வேகம் அளித்துப் பரவலை அதிகரிக்கும் வகையிலேயே இருக்க வேண்டும்.

இதன் மூலம், இனி இந்தியாவை செயற்கை நுண்ணறிவு ஆற்றலின் ஒரு பங்கேற்பாளராக உலகம் பார்க்காமல், அறிவியல் தொழில்நுட்ப சகாப்தத்தின் முதன்மைக் கட்டமைப்பாளராகவே பார்க்கும்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT