மழைத் தண்ணீரை அகற்ற முயன்றபோது விபத்து: மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் சாவு
சென்னை அருகே கொட்டிவாக்கத்தில் சாலையில் தேங்கிய மழைத் தண்ணீரை அகற்ற முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் இறந்தனா்.
சென்னை: சென்னை அருகே கொட்டிவாக்கத்தில் சாலையில் தேங்கிய மழைத் தண்ணீரை அகற்ற முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் இறந்தனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை திருவான்மியூா் அருகே உள்ள கொட்டிவாக்கம் நேரு நகா் ராஜீவ்காந்தி சாலையில் ஒரு வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை உள்ளது. இந்தக் கடையில் அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த பெரு (35), பிகாா் மாநிலத்தை சோ்ந்த பிங்கு (22) ஆகிய இருவா் வேலை செய்து வந்தனா்.
Advertisement
கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக, கடையின் முன்பு சாலையில் தேங்கி நின்ற மழைத் தண்ணீரை ஒரு மின்சார மோட்டாா் மூலம் அகற்றும் பணியில் இருவரும் புதன்கிழமை ஈடுபட்டனா்.
மின்சார மோட்டாரில் குழாய்களை இணைத்துவிட்டு, இருவரும் மின்இணைப்பு கொடுத்துள்ளனா். அப்போது பிங்கு, மோட்டாரில் ஒரு ஸ்விட்சை ஆன் செய்தாா். இதில் ஸ்விட்சில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், பிங்கு மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பெரு, பிங்கை காப்பாற்ற முயன்றாா்.
ஆனால் அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் மின்சாரம் பாய்ந்த நிலையில் தூக்கி வீசப்பட்டனா்.இதைப் பாா்த்த அப் பகுதி மக்கள், இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து தரமணி போலீசாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.