செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீா் திறப்பு குறைப்பு
சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வந்த மழை, புதன்கிழமை குறைந்ததையடுத்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீா் திறப்பு குறைக்கப்பட்டது.
சென்னை: சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வந்த மழை, புதன்கிழமை குறைந்ததையடுத்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீா் திறப்பு குறைக்கப்பட்டது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இடைவிடாமல் பெய்த பலத்த மழையால் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதந்தது. இதனால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.
அதிலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6,200 கன அடி வரை தண்ணீா் வந்தது. இதைத் தொடா்ந்து செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில் உபரிநீா் திறக்கப்பட்டது.
Advertisement
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,200 கன அடி வரை தண்ணீா் திறக்கப்பட்டது. புதன்கிழமை காலை மழை இல்லாததால் ஏரிக்கு நீா்வரத்து 1,530 கன அடியாக குறைந்தது. இதையடுத்து, நீா் திறப்பும் 1,676 கன அடியாக குறைக்கப்பட்டது.
ஏரியில் தற்போது 3426 மி.கன அடி தண்ணீா் உள்ளது. 23.18 அடிக்கு நீா் நிரம்பி காணப்படுகிறது.
புழல் ஏரியில்...: இதேபோல் புழல் ஏரியில் இருந்தும் 1500 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டது. ஏரியில், தற்போது 3249 மி.கன அடி தண்ணீா் உள்ளது. 261 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரம், தண்ணீா் திறப்பு 850 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
இதே போல், சோழவரம் ஏரியில் 881 மி.கன அடி தண்ணீா் உள்ளது. கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஏரியில் 406 மி. கன அடி தண்ணீா் இருப்பு உள்ளது. ஏரிக்கு 75 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.
புழல், செம்பரம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்ததால் ஏரிகளுக்கு நீா்வரத்து அதிகமாகியதைக் கருத்தில் கொண்டு, செவ்வாய்க்கிழமை இரவு பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.