சினிமாவின் கலை – பாகுபலியை முன்வைத்து…(2)
Ethos பற்றி சென்ற கட்டுரையில் குறிப்பிட்டேன். சினிமாவின் கலை அல்லது பண்பு. ஆனால் அந்தக் கலையைப் புரிந்துகொள்ளாமல் சினிமா என்றால், தொழில்நுட்பம் மட்டுமே என்று கொண்டதால்தான் தமிழ், தெலுங்கு மொழிகளில் நல்ல படங்கள் உருவாவதில்லை. ஃபாண்டஸி, வரலாற்றுக் காவியம் போன்ற பாணிகளில் வெளிவந்த ஹாலிவுட் படங்களோடு பாகுபலியை என்னால் ஒப்பிடவே முடியவில்லை...
Ethos பற்றி சென்ற கட்டுரையில் குறிப்பிட்டேன். சினிமாவின் கலை அல்லது பண்பு. ஆனால் அந்தக் கலையைப் புரிந்துகொள்ளாமல் சினிமா என்றால், தொழில்நுட்பம் மட்டுமே என்று கொண்டதால்தான் தமிழ், தெலுங்கு மொழிகளில் நல்ல படங்கள் உருவாவதில்லை. ஃபாண்டஸி, வரலாற்றுக் காவியம் போன்ற பாணிகளில் வெளிவந்த ஹாலிவுட் படங்களோடு பாகுபலியை என்னால் ஒப்பிடவே முடியவில்லை.
போட்டி போடுவதை விடுங்கள்; அவற்றின் அருகில்கூட நெருங்க முடியாதுபோல் தெரிகிறது. இந்தப் பகுதியை எழுதுவதற்கு முன்னால் Gladiator (2000), The Lord of the Rings (2001-2003), Troy (2004) ஆகிய படங்களைப் பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். பார்த்த பிறகு தோன்றியது, இன்னும் நூறு ஆண்டுகள் சென்றால்கூட நம்மால் அது போன்ற படங்களை நெருங்க முடியாது. மேலும், இயக்குனர் ராஜமௌலி, பாகுபலியின் மூலம் ஒரு தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்திவிட்டார். ஏனென்றால், அடுத்து நம்முடைய ஷங்கர் 300 கோடியில் பாகுபலி மாதிரியே ஒரு படத்தை எடுத்துவிடுவார். பிறகு, வரலாற்றுப் படம் என்றால் அது அந்தத் திசையிலேயே போய்க்கொண்டிருக்கும். ஃபாண்டஸி அல்லது வரலாற்றுக் காவியம் என்பது அதற்காகச் செலவழித்த கோடிகளில் இல்லை என்பதுதான் பாகுபலியின் மூலம் நாம் கற்க வேண்டிய பாடம்.
பெரூவில் பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்த இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகத் திகழும் மாச்சு பிச்சு அழிவுகளில் போய் டூயட் பாடி விட்டு வந்த பெருமைக்கு உரியது தமிழ் சினிமா. எந்திரனில் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு ரசித்தோம். சினிமா என்பது எத்தனை கோடிகள் செலவழித்தாலும், பொழுதுபோக்கையே அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும், அது ஒரு கலை வடிவம் என்பதைப் புரிந்துகொள்ளாததால்தான் ஒரு மாபெரும் இனத்தின் வரலாற்றுப் பெருமைக்குச் சான்றாக நிற்கும் இடத்தில் போய் டூயட் கம் க்ரூப் டான்ஸ் ஆடவைக்கத் தோன்றுகிறது.
Advertisement
நிகழ்த்துக் கலைகள் எல்லாமே பொழுதுபோக்கை பிரதான குறிக்கோளாகக் கொண்டவைதான் என்றாலும், அதில் கலை அம்சம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சினிமாவுக்கும் செங்கல், பிளாஸ்டிக் குவளை, டூத் பிரஷ் தயாரிப்பு போன்ற வேலைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். காசு இருந்தால் தங்கத்தில் டூத் பிரஷ் தயாரித்து மேற்கு நாடுகளுக்கு சவால் என்று சொல்ல முடியுமா? டூத் பிரஷ் தயாரிப்பதற்கும் கலைக்குமான வித்தியாசம் இதுதான். Ethos என்பதைப் புரிந்துகொண்டால், நாம் மாச்சு பிச்சுவில் போய் க்ரூப் டான்ஸ் எடுக்கமாட்டோம். பாப்லோ நெரூதா, மாச்சு பிச்சுவைப் பற்றி ஒரு நீண்ட கவிதை எழுதினார். அதன் இணைப்பு கீழே -
தென்னமெரிக்க ஆதிகுடிகள், ஸ்பானிய ஆதிக்கவாதிகளை எதிர்த்துப் போராடியதன் குறியீடு அந்தக் கவிதை. ஒரு இனத்தின் கலாசார மாண்பை எடுத்துச் சொல்வது அந்தக் கவிதை. அதுதான் மாச்சு பிச்சு. நமக்குத் தெரிந்த ஒரு உதாரணம் சொல்கிறேன். ஜாலியன் வாலாபாக் என்ற ஊரில் போய் டூயட் காட்சியைப் படம் பிடிப்பார்களா? பிடித்தாலும் பிடிப்பார்கள்; பள்ளிக் குழந்தைகளைக் கற்பழித்த கொடூரன்களான பில்லா, ரங்கா என்ற இரண்டு கிரிமினல்களின் பெயரையே நாயகர்களுக்குச் சூட்டி, சினிமா தலைப்பாகவும் வைத்துப் படம் எடுத்த சூழல் ஆயிற்றே?
பாகுபலியின் தவறான முன்னுதாரணம் என்னவென்றால், பல நூறு கோடிகளை செலவழித்துவிட்டால் அது காவியப் படம், ஃபான்டஸி படம் என்ற பெயரைப் பெற்றுவிடலாம் என்பதுதான். மற்றபடி அது எவ்வளவு மொண்ணையான படமாகவும் இருக்கலாம். தென்னிந்திய சினிமாவில் அப்படி ஒரு பாதை வகுக்கப்பட்டால், குறைந்தபட்சம் இந்தக் கட்டுரை அந்தத் தவறான முன்னுதாரணத்தைச் சுட்டிக் காட்டியதாகவாவது இருக்க வேண்டும் என்பதே என் அக்கறை. படத்தில் என்ன குறை? ஒரு பொழுதுபோக்குச் சித்திரத்தில் கலை எல்லாம் இருக்க வேண்டுமா?
துப்பாக்கி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கோலி சோடா போன்ற படங்களைப் பற்றி நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அதுபோல் நூறு படங்கள் வரலாம். ஆனால் 200 கோடி செலவில் க்ளாடியேட்டர் போன்ற ஒரு வரலாற்றுச் சித்திரம் எடுக்கப்படுகிறது, இந்தியாவிலேயே அதிக செலவில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமைகளையெல்லாம் தாங்கிக்கொண்டு வரும்போதுதான், அதில் கலை அம்சம் கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது.
அகிரா குரஸவா, ஜப்பானின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். 1950-ம் ஆண்டு வெளிவந்த ரஷோமான் என்ற படத்தின் மூலம் உலகப் புகழ் அடைந்தார். அந்த வெற்றியைத் தொடர்ந்து, 1965 வரை அவர் ஆண்டுக்கு ஒரு படம் என்று எடுத்தார். சரியாகச் சொன்னால், அந்தப் பதினைந்து ஆண்டுகளில் பனிரண்டு படங்களை இயக்கினார் குரஸவா. பின்னர் 1975-ல், அவர் ஷேக்ஸ்பியரின் லியர் மன்னன் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படம் எடுக்க விரும்புவதாக அறிவித்தார். அந்தப் படத்துக்கான பணம் அவருக்குக் கிடைக்க பத்து ஆண்டுகள் ஆயிற்று. உலகப் புகழ் பெற்ற இயக்குனருக்கு அந்தக் கதி. அதிலும், பல ஹாலிவுட் படங்கள் அவருடைய படங்களைத் தழுவி அல்லது அவரது பாணியில் எடுக்கப்பட்டவை. அவருடைய Seven Samurai (1954) தான் ஹாலிவுட்டின் Magnificent Seven (1960); குரஸவாவின் Hidden Fortress (1958) தான் ஹாலிவுட்டின் ஸ்டார் வார்ஸ் (1977). அதேபோல், க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் இரண்டு படங்கள் குரொஸவாவின் படங்களைத் தழுவி எடுக்கப்பட்டவை. ஆனால், குரஸவா தனது படங்களுக்கான கதைகளை ஷேக்ஸ்பியரிலிருந்தும், தஸ்தயேவ்ஸ்கியிடமிருந்தும் எடுத்துக்கொண்டார்.
இப்படியாக ஹாலிவுட்டின் பிரம்மாண்டமான வரலாற்றுப் படங்களுக்கு அகிரா குரஸவாவின் படங்கள் தூண்டுதலாகவும் வழிகாட்டியாகவும் இருந்தன. குரஸவா, இந்தியாவில் பிரபலமாக இருப்பதன் காரணமும் அதுதான். (தனிப்பட்ட முறையில் என் சினிமா ரசனை குரஸவாவின் படங்களுக்கு நேர் எதிரான பாணியில் எடுக்கப்பட்ட ஐரோப்பிய சினிமாவையே சார்ந்தது). பின்னர் 1985-ல் குரஸவா எடுக்க விரும்பிய லியர் படத்துக்கான பணம் கிடைத்தது. அப்போது அவர் வயது 75. Ran (குழப்பம்) என்ற அந்தப் படம் 60 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டபோது, அன்றைய தினம் (1985) ஜப்பானில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் அதுதான். அந்தக் காரணத்தினால்தான், பாகுபலியைப் பார்த்தபோது எனக்கு Ran ஞாபகம் வந்தது. ஆனால், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் கலைக்கும் சந்தைப் பொருளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது.
Ran படத்தைப் பார்த்து சுமார் 25 ஆண்டுகள் இருக்கும். அதில் வரும் ஒரு காட்சி இன்றளவும் மனத்தில் நிற்கிறது. அரசன் தன்னுடைய பிள்ளைகளால் விரட்டப்பட்டு தெருவுக்கு வந்துவிடுகிறான். அப்போது, ஒரு காட்டில் குருடன் ஒருவனைச் சந்திக்கிறான். அந்தக் குருடன், ஒரு காலத்தில் அரசனாக இருந்தவன். மற்றொரு அரசனால் தோற்கடிக்கப்பட்டு காட்டுக்கு வந்து வசிக்கிறான். அவனைத் தோற்கடித்த அரசன் மிகவும் குரூரமானவன். அவனுடைய இரண்டு கண்களையும் தோண்டிவிடுகிறான். காட்டில் அந்தக் குருடனின் சந்தோஷம் ஒன்றே ஒன்றுதான். அவனுடைய சகோதரி அவனுக்குக் கொடுத்திருந்த ஒரு புல்லாங்குழல். தன்னிடம் வந்திருப்பவன் பேரரசன் ஹிடட்டோரா என்பது குருடனுக்குத் தெரிந்துவிடுகிறது. அப்போது அவன், ‘அரசே, தங்களுக்கு இந்தப் பிச்சைக்காரன் தருவதற்கு இந்தப் புல்லாங்குழலின் இசை தவிர இங்கே வேறு எதுவும் இல்லை’ என்று சொல்லிவிட்டு ஒரு அற்புதமான பாடலை அதில் வாசிக்கிறான். பிறகு ஹிடட்டோரா அவனைப் பற்றி விசாரிக்கும்போது, அவனுடைய கண்களைக் குருடாக்கியவன் தான்தான் என்று தெரிகிறது. ‘உன் கண்களைக் குருடாக்கிய என்னை நீ வெறுக்கவில்லையா?’ என்று கேட்கிறான் ஹிடட்டோரா. அப்போது அந்தக் குருடன் ஒரு அற்புதமான பதிலைச் சொல்கிறான். அந்தப் பதிலுக்காகவே நீங்கள் Ran படத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். Ethos என்று நான் திரும்பத் திரும்பச் சொல்வது அதுதான். அது வெறும் வசனத்தால் வருவது அல்ல. தர்ஸனத்தால் வருவது.
குரஸவாவைக்கூட விட்டுவிடுவோம். அவர் ஒரு மேதை. Lord of the Rings-ஐ எடுத்துக்கொண்டாலும், அதிலிருந்தும்கூட ராஜமௌலி எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அந்தப் படத்தில் ஒவ்வொரு தருணமும் மனிதனின் அடிப்படை உணர்வுகளும், மேன்மையான மதிப்பீடுகளும் பலவித உணர்வுகளால் கொந்தளித்துக் குமுறுவதைக் காண்கிறோம். தேவதை உலகைச் சேர்ந்த ஆர்வன் என்ற பெண், மனிதனான அரகோனைக் காதலிக்கிறாள். அப்போது ஆர்வனின் தந்தை அவளிடம், ‘மரணம் என்றால் உனக்கு என்ன என்று தெரியாது; மனிதர்களின் உலகம் மரணத்தினால் சூழ்ந்தது; ஒரு கட்டத்தில் அவர்கள் அழிந்துவிடுவார்கள்; மரணத்தின் துயரம் உனக்குத் தெரியாது; அவனை மறந்துவிடு’ என்று எச்சரிக்கும்போது, அவள் கூறும் பதில் ஒரு உதாரணம். ஆனால், இப்படிப்பட்ட தருணங்கள் பாகுபலியில் இல்லவே இல்லை என்பதோடு, படு சாதாரணமான மொக்கை தெலுங்குப் படத்தைப்போலவே உருவாக்கப்பட்டிருக்கின்றன, கதையும் காட்சிகளும். அதிலும், சமீபகாலத்தில் நாஸருக்கு ஏன் எல்லாப் படங்களிலும் அந்தத் தொங்கு மீசையை ஒட்டவைத்து நம்மைப் படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. காவியத் தலைவனில் தொடங்கிய சோகம், உத்தம வில்லனில் தொடர்ந்து இப்போது பாகுபலியிலும் தொங்குகிறது. தேர்ந்த நடிகர்களான நாஸரும் ரோகினியும் இடம் பெறும் காட்சிகள், பள்ளிக்கூட ட்ராமாக்களை ஞாபகப்படுத்துவதுபோல் இருப்பதற்குக் காரணம், இயக்குனரிடம் கலை முதிர்ச்சி இல்லை என்பதுதான்.
கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால், அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அரண்மனைகள் எல்லாம் ஏதோ நெருப்புப் பெட்டிகளை அடுக்கியது போன்ற தோற்றத்தைத் தருகின்றன. எல்லோருக்கும் பளபளா வண்ணங்களில் ஆடைகள். வரலாற்றுப் படத்துக்கான ஹீரோ என்றால் ஆறேகால் அடி உயரமும் ஆஜானுபாகுவான தோற்றமும் இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டார்கள்போல் தெரிகிறது. பிரபாஸின் முகத்தில் உணர்ச்சிகளே தெரியவில்லை. லார்ட் ஆஃப் தெ ரிங்க்ஸில் மரங்கள்கூட நன்றாக நடித்திருந்தன.
ஒரு நல்ல படத்துக்கு பட்ஜெட் மட்டும் போதாது; கலா சிருஷ்டியும் வேண்டும் என்பதே பாகுபலி உணர்த்தும் உண்மை. சரி, கலை உணர்வை எப்படிப் பெறுவது? மிகவும் சுலபம். இலக்கியம் பயில வேண்டும்.
பாகுபலி படத்தின் பகுதி-1 விமரிசனத்தைக் காண...