பாகுபலி படமும் எப்படியும் ஹிட் ஆகும் என்று தான் எல்லோரும் எண்ணினார்களே தவிர வசூலில் ஓர் அசுரப் பாய்ச்சலை நிகழ்த்தும் என்று யாரும் கணிக்கவில்லை. நாளுக்கு நாள், இதன் வசூல் விவரங்கள் மிரட்டும் விதத்தில் அமைகின்றன.
முதல் 10 நாளில் 355 கோடி ரூபாயை வசூலித்துவிட்டது பாகுபலி!
இந்த 10 நாளில் எங்கெங்கு எவ்வளவு வசூலித்துள்ளது என்று பார்க்கலாம்.
1. ஆந்திரா/தெலங்கானா - ரூ. 120 கோடி
2. கர்நாடகா - ரூ. 55 கோடி
3. தமிழ்நாடு - ரூ. 35 கோடி
4. கேரளா ரூ. 10 கோடி
5. வட இந்தியா (ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் சேர்த்து) - ரூ. 80 கோடி
(இதில் ஹிந்தி பாகுபலி மட்டும் ரூ. 60 கோடி வசூலித்துள்ளது)
6. வெளிநாட்டில் - ரூ. 55 கோடி
இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் முதல் 10 நாள்களில் 350 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியதில்லை. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படத்துக்கு, 300 கோடியைத் தொட 17 நாள்கள் ஆயின. இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகம் வசூலித்த தெலுங்குப் படம் என்கிற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. இந்த வேகத்தில், அடுத்த 10 நாள்களில் இதன் வசூல் எதுவரை செல்லும் என்று யாராலும் கற்பனை செய்யமுடியவில்லை. நாளுக்கு நாள் ஆச்சரியங்களை அளித்துக்கொண்டிருக்கிறது பாகுபலியின் வசூல்.
எந்திரன் வசூலை முறியடித்ததால் அதிகம் வசூலித்த தென்னிந்திய படம் என்கிற சாதனையை நிகழ்த்திவிட்டு அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது.
அமீர் கானின் பிகே 740 கோடி ரூபாய் வசூலித்ததுதான் இதுவரை அதிகம் வசூலித்த இந்தியப் படமாக உள்ளது. தூம் 3 (ரூ. 540 கோடி), சென்னை எக்ஸ்பிரஸ் (ரூ. 423 கோடி), 3 இடியட்ஸ் (ரூ. 392 கோடி), ஹாப்பி நியூ இயர் (ரூ. 383 கோடி), கிக் (ரூ. 377 கோடி), க்ரிஷ் 3 (ரூ. 374 கோடி) போன்ற 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பெற்ற படங்களின் சாதனையை பாகுபலி இன்னும் தாண்டிய பிறகே பிகேவுக்குச் சவால் விட முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.