வழக்கமான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களன்களைத் தேர்ந்தெடுத்து அசத்துகிறார்கள் திரைத்துறையில் களமிறங்கியுள்ள இளம் இயக்குநர்கள். வித்யாசமான அனுபவங்களைத் திரை ரசிகர்களுக்கு அள்ளித் தரத் தயங்குவதில்லை இவர்கள். சஸ்பென்ஸ் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு. 54321 என்று தன் படத்தின் பெயரிலேயே வித்யாசத்தை காண்பித்துள்ள ராகவேந்திர பிரசாத், ‘பீட்சா’ புகழ் கார்த்திக் சுப்புராஜின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் அர்விந்த் (ரம்மி, தாண்டவக்கோன் படங்களில் நடித்தவர்) ஹீரோவாக நடிக்க, கன்னட நடிகை பவித்ரா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் ரோகினி, சபரி, ரவி ராகவேந்தர், பசங்க சிவகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். காதல் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கும் இப்படத்திற்கு நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதுகிறார். ஒளிப்பதிவு பானு முருகன், கலை ராம், எடிட்டிங் ரஜீஷ், நடனம் ஷெரிப் மற்றும் சண்டைப்பயிற்சி திலீப் சுப்புராயன்.
’5 முக்கிய கதாபாத்திரங்கள், 4 பேரின் வாழ்க்கை, 3 கொலைகள், 2 மணி நேர கால அவகாசம், 1 பழிவாங்கும் நிகழ்ச்சி’ என்று 54321 எனும் தலைப்புக்கும் கதைக்கும் உள்ள தொடர்பை விளக்கினார் ராகவேந்திர பிரசாத். ’இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் விறுவிறுப்பான காட்சிகள் நிறைய... இதுவரை த்ரில்லர் படங்களில் காட்சிப்படுத்தாத வடிவத்தை இப்படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் ஜூன் மாதம் திரையிடப்படும்’ என்றார் ராகவேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.