நடிகை சித்ரா கொலை? காவல்துறையின் சந்தேகங்கள்
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ராவின் மரணம் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த மரணம் கொலையா? தற்கொலையா எனும் கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ராவின் மரணம் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த மரணம் கொலையா? தற்கொலையா எனும் கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தனது நடிப்பால் பல ரசிகர்களின் மனதை வென்ற அவர் நடனம், மாடலிங் என பல துறைகளில் இயங்கி வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேம்நாத் என்பவருடன் சித்ராவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் ஜனவரி மாதம் திருமணம் செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவான்மியூரை சேர்ந்த சித்ரா சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அறையில் தங்கியிருந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்துடன் தங்கியிருந்த சித்ரா ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக புதன்கிழமை காலை மீட்கப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை காவல்நிலைய காவலர்கள் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. காவல்துறை விசாரணையில் நடிகை சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் இரு மாதங்களுக்கு முன்பே பதிவுத் திருமணம் நடைபெற்றதாக தெரிய வந்தது. பலரது முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜனவரி மாதம் நடைபெற இருந்த நிலையில் யாரும் அறியாவண்ணம் இரண்டு மாதங்களுக்கு முன்பே பதிவுத் திருமணம் மேற்கொண்டது ஏன் எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட சித்ராவின் முகத்தில் காயம் ஏற்பட்டது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை சித்ராவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சக நடிகர்கள் சித்ரா குறித்து தெரிவிக்கும் கருத்துகள் மரணத்தில் நிலவும் மர்மத்தை குறித்து மேலும் சந்தேகங்களை கிளப்புகின்றன.
நடிகை சித்ரா கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகளின் மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சித்ராவின் தந்தை காமராஜ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தந்தை காமராஜ் அளித்துள்ள புகாரால் சித்ராவின் தற்கொலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளன.
நேற்றிரவு வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களைப் பதிவேற்றி வந்த சித்ரா இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்டதற்கு இடையில் நடந்தது என்ன? எனும் கேள்வி அவரது ரசிகர்கள் உள்பட அனைவரையும் சூழ்ந்துள்ளது.
மேலும் திடீரென விடுதி அறையிலிருந்து ஹேம்நாத் வெளியேறியது ஏன் என காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.
பலரது ரசிகர்களின் மனதை வென்ற நடிகை சித்ராவின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.