மூளையில் அறுவைச் சிகிச்சை: பிக்பாஸ் அர்ச்சனாவின் உருக்கமான பதிவு
பிக்பாஸ் புகழ் அர்ச்சனாவிற்கு தலையில் அறுவைச் சிகிச்சை நடைபெறவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சின்னத்திரை தொகுப்பாளர் விஜே அர்ச்சனா சன் டிவியில் ஒளிபரப்பான 'காமெடி டைம்' நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானார். சமீபத்தில் 'பிக்பாஸ் சீசன் 4' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு மிகுந்த புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதன் காரணமாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது மகளுடன் சேர்ந்து அவர் பதிவிடும் விடியோக்கள் வைரலாகின.
தற்போது அவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதில் தனக்கு தலையில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாக அறிவித்துள்ளார்.
அந்த பதிவில், ''நான் இதயம் சொல்வதைக் கேட்டு செயல்படுவள். அதனால் கோபமடைந்த என் மூளை சிறிய பிரச்னைகளை அளித்துள்ளது. அது தலையில் உள்ள மண்டை ஓட்டுப்பகுதியில் தாக்கியது. அதன் காரணமாக அங்கு சிறிய துளை உருவாகியுள்ளது. அதனை மூட வேண்டும். எனது மூளைக்கு அருகில் சிஎஸ்எஃப் என்ற அறுவைச் சிகிச்சையை செய்ய வேண்டும்.
எம்ஆர்ஐ ஸ்கேன் எனக்கு மூளை இருப்பதை காட்டியுள்ளது. நான் ஒரு வாரத்தில் வீடு திரும்பி விடுவேன். இதன் காரணமாக எனது செல்போனில் வரும் எந்த அழைப்பையும் ஏற்க முடியவில்லை. எனது மகள் சாரா உங்களுக்கு என்னைப் பற்றிய தகவல்களை அளிப்பார். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.