ஜூனியர் என்டிஆருக்கு சமூக ஊடகங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜூனியர் என்டிஆரின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட படங்கள் உள்பட உள்ளடக்கங்களை வியாபார நோக்கத்துடன் பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து அவர் தரப்பிலிருந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று(டிச. 8) விசாரணைக்கு வந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெ. சாய் தீபக், என்டிஆரின் தனிப்பட்ட ஆளுமை உரிமைகளை மீறும் விதத்தில் பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றங்களைச் செய்வதாக வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் தளங்களிலும் சமூக ஊடகங்கத்தைச் சார்ந்த சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கிய அறிவுறுத்தலில், என்டிஆரின் மனுவை ‘தகவல் தொழில்நுட்பச் சட்டங்கள், 2021-இன் கீழ்’ முறையான புகாராகக் கருதி 3 நாள்களுக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதே பாணியில், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், நாகர்ஜுனா, அனில் கபூர், அபிஷேக் பச்சன், ராஜ் ஷமானி ஆகிய பிரபலங்களின் தனிப்பட்ட ஆளுமை உரிமைகள் மீறப்பட்டு வியாபாரக் கண்ணோட்டத்துடன் தவறாக அனுமதியின்றி பல்வேறு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பயன்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நபர்களும், இதே பாணியில் வழக்கு தொடர்ந்து, தங்களது பெர்சனாலிட்டி ரைட்ஸ் எனப்படும் தனிப்பட்ட ஆளுமை உரிமைகளை பாதுகாத்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.