சினிமா

கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம்

முனிஷ்காந்த் நடிப்பில் வெளியாகியுள்ள மிடில் கிளாஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்...

தினமணி செய்திச் சேவை

முனிஷ்காந்த் விஜயலட்சுமி நடிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில்  வெளியாகியுள்ள மிடில் கிளாஸ் படம் வெற்றியா தோல்வியா?

படத்தின் கதைக்களம் என்னவென்றால் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமிக்கு முனிஷ்காந்தின் தந்தையால்  1 கோடி ரூபாய் காசோலை ( cheque ) 

கிடைக்கிறது. அந்த Cheque தங்களின் வாழ்க்கையை மாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் அந்த குடும்பம் இருக்கும்போது எதிர்பாராத விதமாக அந்த Cheque-ஐ முனிஷ்காந்த் தொலைத்துவிடுகிறார். அந்த Cheque-ஐ  கண்டுபிடித்தார்களா?, அந்த குடும்பம் பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட்டதா என்பதே படத்தின் கதைகளமாக அமைந்திருக்கிறது.

மிடில் கிளாஸ் படத்தில் முனிஷ் காந்த்

படத்தின் கதாநாயகனான முனிஷ்காந்த் ஹீரோவாக கலைக்கச்சிதமாக இந்த கதைக்குள் பொருந்தியுள்ளார். ஒரு பொறுப்பான மிடில் கிளாஸ் ஆணின் பிரதிபளிப்பாகவும் 2 குழந்தைகளின் தந்தையாகவும் மனைவியின் ஆசைகளை பூர்த்தி செய்யும் கணவனாகவும் அவர் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். மனைவியாக நடித்த விஜயலட்சுமியும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். சிடுசிடுவென எரிந்து விழுகும் குடும்பப் பெண்ணாகவும் ஆங்கங்கே காதலை வெளிப்படுத்தி வெட்கப்படும் மனைவியாகவும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படும் தாயாகவும் அவரது கதாபாத்திரம் நம் மனதில் நிற்கும் அளவில் இருந்தது. 

படத்தில் குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ராதாரவியும் அவ்வப்போது சில காட்சிகளில் எட்டிப் பார்க்கும் காளி வெங்கட்டும் படத்தின் நான்காவது தூணாக செயல்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் இவர்கள் இருவரையும் இன்னும் சற்று நேரம் அதிகமாக திரையில் காட்டி இருக்கலாம் என்ற ஏக்கம் அனைவருக்கும் எழக்கூடும். 

மிடில் கிளாஸ் படத்தில் நடிகை விஜயலட்சுமி

இவர்களுடன் படம் முழுவதும் முனீஸ் காத்துடன் பயணிக்கும் கோடாங்கி வடிவேலு மற்றும் குரேஷி ஆகியோர்  அவ்வப்போது நம்மை சிரிக்க வைத்தும் கதையை தொடர்ந்து நகர்த்தி செல்லும் கதாபாத்திரங்களாகவும் இருக்கின்றனர். படத்தின் இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் தான் சொல்ல வந்த கருத்தை எளிமையாகவும் சிறப்பாகவும் இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்  எனக் கண்டிப்பாகச் சொல்லலாம்.

ஒரு குடும்பப் படமாக இருந்தாலும் அதற்குள் சில சுவாரசியங்களை ஒளித்து வைத்திருந்தார். இது அவரின் முதல் படமாக இருந்தாலும் எந்த இடத்திலும் படம் மெதுவாக செல்கிறது என்ற எண்ணம் வராத அளவிற்கு திரைக்கதையை வடிவமைத்துள்ளார். படத்தின் கதை ஒரு திசையை நோக்கி நகர்ந்தாலும் இறுதியில் நமக்கு கிடைப்பதை அனைவரிடமும் பகிர்ந்து நாம் அனுபவிக்க வேண்டும் என்ற இயக்குனர் சொல்லும் கருத்து படத்தை விட்டு விலகாமல் படத்தோடு ஒன்றியிருக்க அவர் செய்த சின்ன சின்ன நுணுக்கங்களும் படத்தின் அழகு பொருளாக அமைந்துள்ளது. 

மிடில் கிளாஸ் படத்தில் ஒரு காட்சி

படத்தில் இசையமைப்பாளரான பிரணவ் முனிராஜ் தனது பின்னணி இசை மூலம் படத்திற்கு பக்கபலகமாக இருக்கிறார். நகைச்சுவை காட்சிகளிலும் சென்டிமெண்ட் காட்சிகளிலும் தனது பின்னணி இசை மூலம் அக்காட்சிகளை ஒரு படி மேலே உயர்த்தி காட்டியுள்ளார். படத்தில் அதிகளவில் பாடல்கள் இடம்பெறாவிட்டாலும் கதையோடு சேர்ந்து பயணிக்க தேவையான பின்னணி இசையை இசையமைப்பாளர் கொடுத்திருப்பது ரசிக்கும் வண்ணமே இருந்தது. இருப்பினும்  பாடல்கள் இல்லாதது ஒரு சில இடங்களில் உணர்வுகளை கடத்த கொஞ்சம் தவறவிட்டதாக சிலருக்குத் தோன்றலாம்.

படத்தின் ஒளிப்பதிவாளரான சுதர்சன் ஸ்ரீனிவாஸ் மற்றும் படத்தொகுப்பாளரான சான் லோகேஷ் ஆகியோர் படத்தில் எந்த ஒரு இடத்திலும் நாம் தொந்தரவாகாத அளவிற்கு தங்களது வேலையை செய்திருந்தனர். அதிலும் குறிப்பாக இடைவேளைக்குப் பின் வரும் தேடுதல் காட்சிகளில் நாமே தேடுவது போன்ற ஒளிப்பதிவு இருப்பது பாராட்டுதலுக்குரியது.

மிடில் கிளாஸ் படத்தில் ராதாரவி

படத்தின் முதல் பாதியில் ஒரு நடுத்தர குடும்பத்தின் (middle class) வாழ்க்கை முறை எப்படி இருக்கும் அவர்கள் வாழ்வில் எதுவெல்லாம் அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் எதுவெல்லாம் ஒரு குடும்பத்தில் பிரச்சினையாக வந்து அமையும் என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் காட்டியிருந்தனர். பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள் முதல் பாதி முழுவதும் நிறைந்திருக்கும். சிறுவயதில் எல்லோரும் வீட்டில் செய்த சேட்டைகள் மற்றும் வாழ்ந்த வாழ்க்கை முறையை இப்படம் நினைவுபடுத்துவது மற்றுமொரு ப்ளஸ்!. 

இடைவேளைக்குப் பின் வரும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் சென்டிமென்ட் கலந்தும் இருப்பது படத்தை அடுத்த கோணத்திற்கு கொண்டு செல்கிறது. படத்தில் நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் காட்சிகளை இயக்குநர் சிறப்பாக கையாண்டிருப்பதைக் கவனிக்காமல் இருக்க முடியாது!

மிடில் கிளாஸ் படத்தில் ஒரு காட்சி

ஒருவன் தனக்குப் பிடித்ததுபோல் வாழ்வதா அல்லது இந்த சமூக அந்தஸ்துக்காக வாழ்வதா என்பதை இப்படத்தின் மூலம் விவாதித்திருக்கிறார் இயக்குனர். ஒட்டுமொத்தமாக அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு Family Entertainer-ஆக திரைக்கு வந்துள்ள இந்த படத்தின் குழுவுக்கு பாராட்டுகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... பாவங்கள் நீங்கி இன்பமுடன் வாழ திருச்சுழியல் திருமேனிநாதர்!

ஓடிடியில் வெளியான பைசன், டீசல்!

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

இளையராஜா பெயர், படத்தை வணிக நோக்கத்துடன் பயன்படுத்த இடைக்காலத் தடை!

வங்கதேசத்தில் 5.7 ஆகப் பதிவான நிலநடுக்கம்: மக்கள் பீதி!

SCROLL FOR NEXT