செய்திகள்

இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை

DIN

இசை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்யும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸூக்கு பாத பூஜை செய்தார்.
கடந்த 1966 -ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாடகராக தன் பயணத்தை தொடங்கிய எஸ்.பி.பி.க்கு, இசை உலகில் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

1960 -களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம், 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். இவர் தமிழில் "ஹோட்டல் ரம்பா' திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதலில் பாடினார்.

தன் திரை இசைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, தன் குடும்பத்தில் ஒருவராக கருதும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு அவர் பாத பூஜை மரியாதை செலுத்தினார். தன் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கே.ஜே.ஜேசுதாஸ் -பிரபா தம்பதியினருக்கு பாதபூஜை செய்தார்.

பின்னர் எஸ்.பி.பி. பேசியது:
இசை உலகில் 50 -ஆவது ஆண்டை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் என் இசை முன்னோடிகள் அனைவருக்கு மரியாதையை செலுத்திக் கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், உதவியாக இருந்த இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலான ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு இசை மேதைக்கு நிறைய கௌரவம் கிடைக்கிறது என்றால், அது அவனால்தான் சாத்தியம் என்றால் அது முட்டாள்தனம். என் வளர்ச்சியில் என் பங்கும் இருந்தாலும், என் பயணத்துக்கு உதவியவர்கள் பலர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

தீர்க்க முடியாத கடன்: என் மனதுக்கு மிகவும் பிடித்தவர் பாடகர் முகம்மது ரஃபி. அதன் பின் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என் அண்ணன் ஜேசுதாஸ். இந்த தருணத்தில் அவரிடம் ஆசி வாங்க வேண்டும் என்று நினைத்தேன். என் ஆசையை ஏற்றுக் கொண்ட அவர் வந்ததற்கு நன்றி. இந்தக் கடனை எந்த ஜென்மம் எடுத்தாலும் தீர்க்க முடியாது.

என்னால் என்ன முடியுமோ, என் அறிவால் எந்த உயரத்தை எட்ட முடியுமோ அதை எட்டியிருப்பதாக நினைக்கிறேன். இனி செய்வதற்கு எந்தப் புதுமையும் இருப்பதாக நினைக்கவில்லை.

இப்போதும் திறமையாளர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் நாளுக்குநாள் வளர்ந்து வருகிற தொழில்நுட்பம் அவர்களைச் சரியாக பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கி விடுகிறது. இதை தடுக்க முடியாது.
இருந்தாலும், நன்றாக பாடுகிறவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான இடத்தை அளிக்க வேண்டும் என்றார் எஸ்.பி.பி.

கடவுள் அருள் பெற்றவர் எஸ்.பி.பி. -ஜேசுதாஸ்: ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், நானும் எஸ்.பி.பி.யும் சகோதரர்கள் போன்றவர்கள். என் மீது மாறாத பாசமும், பரிவும் கொண்டவர் எஸ்.பி.பி. ஒரு வெளிநாட்டு பயணத்தின்போது எஸ்.பி.பி. என் பசியாற்றிய சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. எஸ்.பி.பி. என்றதும் உடனே எனக்கு அச்சம்பவம்தான் நினைவுக்கு வரும். எஸ்.பி.பி. கடவுளின் அருளை பெற்றவர். அவர் மேன்மேலும் சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்திப் பேசினார் ஜேசுதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT