நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் (82) லண்டனில் மாரடைப்பால் காலமானார். லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு நள்ளிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உயிர் பிரிந்தது. 1936-ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த சந்திரஹாசன் வழக்குரைஞர் பட்டம் பெற்றவர். கமல்ஹாசனின் இரண்டாவது மூத்த சகோதரர் இவர். நடிகை சுகாசினியின் தந்தை சாருஹாசன் அனைவருக்கும் மூத்தவர். கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து நிர்வகித்து வந்தார் சந்திரஹாசன். அவரது மனைவி கீதாமணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார்.
சந்திரஹாசனின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் ரஜினி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கமல்ஹாசனைப் போன்ற ஒரு கோபக்காரரை நான் பார்த்தது இல்லை. கமல்ஹாசன் கோபக்காரர் என்பதால்தான் நான் அவரிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பேன். அவரை சந்திரஹாசன் தான் வழிநடத்துவார். பாலசந்தர், அனந்து, சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர் கமலின் உயிர்கள். அதில் மூன்று பேர் உயிருடன் இல்லை. அவர்களின் ஆன்மா கமலை வழிநடத்தும். இப்போதுள்ள நடிகர்கள் சம்பாதித்து வைத்திருக்கும் பணம், சொத்து கூட கமலிடம் இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.