செய்திகள்

விஜய் சேதுபதி கையில் இப்போது எத்தனை படங்கள்?

எழில்

கடந்த வருடம் விஜய் சேதுபதி நடித்து 6 படங்கள் வெளிவந்தன.

இந்த வருடமும் அதற்குப் போட்டியாகப் படங்கள் வெளிவரவுள்ளன. சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்து கேவி ஆனந்த் இயக்கத்தில் கவண் வெளியானது. விஜய் சேதுபதி படங்களில் முதல் வாரத்தில் அதிக வசூலான படம் என்கிற பெயரைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில் அடுத்ததாக வரிசையாகப் பலபடங்களில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. எனவே இந்த வருடமும் அவர் நடிப்பில் பல படங்கள் வெளிவர வாய்ப்புள்ளன. 

மாதவனுடன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதிச் சுற்று போன்ற படங்களைத் தயாரித்த சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பி.எஸ். வினோத் இசை. ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமையவுள்ளது. 

ரேணிகுண்டா பட இயக்குநர் பன்னீர் செல்வத்துடன் இணைந்து கருப்பன் என்கிற படத்தில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. 

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா ஆகியோர் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்கள். இந்தப் படத்துக்கு 96 என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி - கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடம் ஒக்க மனசு என்கிற தெலுங்குப் படம் மூலமாக கதாநாயகியான சிரஞ்சீவின் உறவினரான நிகாரிகா இதில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்கிறார். இது அவருடைய முதல் தமிழ்ப்படம்.

ஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா-வின் அடுத்தப் படமான, அநீதிக் கதையில் ஃபாஹத் ஃபாசிலுடன் இணைந்து நடிக்கிறார் விஜய் சேதுபதி.  

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பட இயக்குநர் கோகுல், விஜய் சேதுபதியை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஏமி நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.  

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்கிய இப்படம் புரியாத புதிர். பலநாள்களாக இப்படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படமும் இன்னமும் வெளியாகாமல் உள்ளது. 

மேலும் இயக்குநர் சேரன் படத்திலும் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்த ஓர் அறிக்கையில் சேரன் கூறியதாவது: என்னோட நெருக்கடி தெரிந்தும், பொருளாதார சூழல் தெரிந்தும் நீங்க நல்லா வரணும் சார்… நீங்க கதை சொல்லுங்க சார், நான் நடிக்கிறேன்னு ஒருத்தர் வந்தாரு பாருங்க… கதையை கேட்டுட்டு, நான் தேதி தரேன் சார்… நாம பண்ணலாம் சார் அப்படின்னு ஒரு நடிகர் சொன்னார் பார்த்தீங்களா? அதுதான் மனிதாபிமானம்… உதவி, மாற்று வழி… அந்த மனிதன்தான் விஜய் சேதுபதி… அவர்தான் சரியான மனுஷன்… ஒரு மனுஷனோட பிரச்னைக்கு உண்மையான தீர்வு என்னனு பார்க்குற மனிதத்தன்மை.. அவருக்கு நான் தலை வணங்கலாம் எத்தனை முறை வேணும்னாலும்… தேதி கொடுத்ததுக்கு அல்ல… பிறர் துன்பம் புரிந்து அதை துடைக்க வந்த நல்ல மனசுக்கு… என்று விஜய் சேதுபதியைப் பாராட்டி சேரன் அறிக்கை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT