கந்துவட்டிக் கும்பலுக்கு ஒரு முடிவு கட்டுவோம்: தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை குறித்து விஷால் அறிக்கை!
காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலைஅல்ல. கொலை. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அனைவரையும் உடனடியாக...
சென்னை வளசரவாக்கத்தில், சினிமா ஃபைனான்சியர் கடனைக் கேட்டு மிரட்டியதால், திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கந்துவட்டி கொடுமைக்குக் கடைசி பலியாக இது அமையட்டும்!
கந்துவட்டி அடாவடிக் கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் இன்று பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். தயாரிப்பாளர் சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர் இதுபோல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டிக் கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாகச் சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கிக் காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்தக் கந்துவட்டிக் கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரியக்கூடிய சூழ்நிலை உருவாகத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.
காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலைஅல்ல. கொலை. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பா. அசோக்குமார் (44). இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனர். சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தை அசோக்குமார் நிர்வகித்து வந்தார். அத்துடன் சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராகவும், அலுவலக நிர்வாகியாகவும் இருந்தார். வழக்கமாக காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் அசோக்குமார் செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. இந்நிலையில் அலுவலக ஊழியர்கள், அவரது செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டபோதும் அவரிடமிருந்து பதில் இல்லை. அதையடுத்து, அசோக்குமார் வீட்டுக்கு ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அவர் தனது உடற்பயிற்சி அறையில் சடலமாகத் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த வளசரவாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, அசோக்குமார் எழுதிய இருபக்கக் கடிதம் கிடைத்தது. அதில், 'தங்கள் நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. அதன் காரணமாக பிரபல திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் பெற்றதாகவும், அவர் கடந்த 6 மாதமாக பணத்தைக் கேட்டு தொல்லை தந்து வந்ததுடன், பலவிதமாக மிரட்டல் விடுத்தும் வந்தார். வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தேன்' என உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இயக்குநர் சசிகுமார், இயக்குநர்கள் பாலா, அமீர், சமுத்திரக்கனி ஆகியோருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று புகார் தெரிவித்தார். அவரது புகாரை அடுத்து திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.