செய்திகள்

கேளிக்கை வரிக்கு ஐநாக்ஸ், பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் எதிர்ப்பு! இன்றுமுதல் இயங்காது என அறிவிப்பு!

எழில்

தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள ஐநாக்ஸ், பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் இன்று முதல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்தும், பிற மொழிப் படங்களுக்கு 20 சதவீதம் கேளிக்கை வரி விதித்தும் தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி சார்பில், திரையரங்க உரிமையாளர்களுக்கு சனிக்கிழமை (செப்.30) அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: 
புதிய திரைப்படங்களுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கேளிக்கை வரி விதிப்பு புதன்கிழமை (செப்.27) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதேசமயம், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களுக்கு கேளிக்கை வரி 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிற மொழி புதிய படங்களுக்கு 20 சதவீதமும், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட படங்களுக்கு 14 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி, திரையரங்க உரிமையாளர்கள் செலுத்தும் ஜிஎஸ்டி கணக்கின் அடிப்படையில் வசூலிக்கப்படும். 

திரைப்படங்களுக்கு 28 சதவீதம் சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி.யுடன் கேளிக்கை வரி 30 சதவீதத்தையும் சேர்த்துச் செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு திரைப்படத் துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதால் கேளிக்கை வரி வசூலிக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், 30 சதவீத கேளிக்கை வரி தற்போது 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 சதவீத கேளிக்கை வரியே அதிகம் என்று திரைப்படத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் கேளிக்கை வரி விகித குறைப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று நடிகர் விஷால் கூறினார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ஜிஎஸ்டி-யுடன், தமிழக அரசின் கேளிக்கை வரியை விதிக்கக்கூடாது என்ற கோரிக்கை தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போன்ற ஒரே வரி விதிப்பு முறையைக் கேட்டிருந்தோம். இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழக அரசின் உத்தரவை பெரிதும் எதிர்பார்த்தோம். இந்த நிலையில், எது நடக்கக்கூடாது என்று நினைத்திருந்தோமோ அது நடந்துள்ளது. அரசின் வரிவிதிப்பு குறைப்பு என்று வந்துள்ள அறிவிப்பு, தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தச் சுமையைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு தமிழ் சினிமா இல்லை. இதுகுறித்து எங்களின் நிலைப்பாட்டை அரசிடம் தெளிவாக எடுத்துக் கூற இருக்கிறோம் என்றார். 

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஐனாக்ஸ், பிவிஆர் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று தமிழ்நாட்டில் உள்ள அதன் திரையரங்குகள் இயங்காது என்று அறிவித்துள்ளன. அரசின் இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மல்டிபிளெக்ஸ் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் உள்ள இதர மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள், வேலைநிறுத்தம் தொடர்பான முடிவை நாளை எடுக்கவுள்ளன. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. அதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT