செய்திகள்

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்துக்குத் தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

எழில்

விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள 'மெர்சல்' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்பட்டுள்ளது. மெர்சல் என்கிற பெயரிலேயே படத்தை விளம்பரப்படுத்தவும் வெளியிடவும் உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏஆர் பிலிம் பேக்டரி உரிமையாளரான ஏ.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். எனது மகன் ஆரூத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பில் படத்தைத் தயாரித்து வெளியிட கடந்த 2014-ஆம் ஆண்டே இந்த தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் 'மெர்சல்' என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

'மெர்சல்' என்ற தலைப்பு நான் பதிவு செய்துள்ள 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பை ஒத்துள்ளது. இந்தத் தலைப்பில் படம் வெளியானால் எனக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே 'மெர்சல்' என்ற பெயரில் தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனமோ அல்லது அதன் உரிமையாளரோ இந்தப் பெயரைப் பயன்படுத்தி படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்' என அந்த மனுவில் கோரியிருந்தார்.

மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அக்.3-ஆம் தேதி வரை 'மெர்சல்' என்ற பெயரில் படத்தை விளம்பரப்படுத்தவோ, படத்தை வெளியிடவோ இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேனாண்டாள் ஸ்டுடியோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'மெர்சல்' என்ற தலைப்பும், 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பும் வேறு, வேறு. நாங்களும் இந்தப் படத் தலைப்பை படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துவிட்டோம். பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இந்த சூழலில் இந்தப் படத்துக்குத் தடை விதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே தடையை நீக்க வேண்டும் என கோரியிருந்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், 'மெர்சல்' படத்தலைப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பைத் தள்ளி வைத்தார். அதுவரை ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் எனக்கூறி உத்தரவிட்டார்.

இந்நிலையில் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மெர்சல், மெரசலாயிட்டேன் என இரண்டு தலைப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. மெர்சல் என்கிற பெயருக்கு டிரேட் மார்க் வாங்கப்பட்டுள்ளது. எனவே மெர்சல் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது. மெர்சல் என்கிற பெயரிலேயே படத்தை விளம்பரப்படுத்தவும் வெளியிடவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT