இந்த வாரம் துப்பறிவாளன், மகளிர் மட்டும் உள்ளிட்ட நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் - மகளிர் மட்டும். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய 2டி நிறுவனம் மூலமாகத் தயாரித்துள்ளார்.
திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு திரும்பியுள்ள ஜோதிகா, முழுக்க முழுக்க தன்னைப் பிரதானப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். அந்தப் பாணியில் மகளிர் மட்டும், பாலா இயக்கியுள்ள நாச்சியார் போன்ற படங்களில் நடித்துள்ளார். மகளிர் மட்டும் படம், செப்டம்பர் 15 அன்று வெளிவரவுள்ளது.
இந்நிலையில் முதல் 3 நாள்களுக்கு இந்தப் படத்தைப் பார்க்க வரும் பெண்களுக்கென ஒரு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களிலும் படம் பார்க்க வரும் பெண்களிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்குப் பட்டுபுடைவை பரிசாக அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு திரையரங்கின் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டுப்புடைவை பரிசாக வழங்கப்படுகிறது. எனவே, படம் பார்க்க வரும் பெண்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர்கள் புதுப் பட்டுப் புடைவையுடன் வீட்டுக்குச் செல்லலாம்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார்.
தணிக்கையில் யு/எ பெற்றுள்ள துப்பறிவாளன், செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் இளையராஜா இசையமைப்பில் சரண் கே. அத்வைதன் இயக்கத்தில் உருவாகியுள்ள களத்தூர் கிராமம், சத்யா இயக்கத்தில் உருவாகியுள்ள யார் இவன் ஆகிய இரு படங்களும் வெள்ளியன்று வெளியாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.