முகப்பு
செய்திகள்

கர்நாடகாவில் காலா வெளியாகும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

காலா படம் வெளியாகும்போது கர்நாடகத் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜூன் 7-ஆம் தேதி திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 'காலா' திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிடவிட மாட்டோம் என்று கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் அறிவித்துள்ளனர். கன்னட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்ற கர்நாடகத் திரைப்பட வர்த்தகச் சபையும் கர்நாடகத்தில் "காலா' திரைப்படத்தை வெளியிட தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், 'காலா' படத்தை கர்நாடகத்தில் திரையிட கன்னட மக்கள் விரும்பவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியும் தெரிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் "காலா' திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்குமாறும், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ், மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவில் கர்நாடக அரசின் தலைமைச் செயலர், உள்துறை செயலர், கர்நாடக டிஜிபி, பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர், சிபிஎஃப்சி, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகி ஆகியோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டார்கள். 

இந்த மனுவில் கூறப்பட்டதாவது: கர்நாடகத்தில் 'காலா' படம் திடையிடப்பட்டால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். எனவே, கர்நாடகத்தில் ஜூன் 7-ஆம் தேதி "காலா' திரையிடப்படும்போது அதன் இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், சம்பந்தப்பட்ட அனைவருக்கும், திரைப்படத்தை பார்க்க வருகை தரும் ரசிகர்கள், பார்வையாளர்கள், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கவும், தங்குதடையில்லாமல் படத்தை திரையிடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், "காலா' படத்துக்கு தடை விதிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. 

காலா படத்தைத் திரையிடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. திரையரங்குகள், ரசிகர்களுக்குப் பாதுகாப்பு தருவது குறித்து அரசிடமே முறையிடவேண்டும். பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு மாநில அரசு சம்பந்தப்பட்டது. அரசிடம் முறையிட்ட பிறகும் பிரச்னை ஏற்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாக முதலில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், காலா படம் வெளியாகும்போது கர்நாடகத் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →