இதர உயிரினங்களும் வாழவே விரும்புகின்றன: விலங்குகளுக்கான காப்பகம் அமைக்கிறார் நடிகை அனுஷ்கா சர்மா!
நமக்கு குடும்பம், நெருங்கிய நட்புகள் உண்டு, நம்மைப் பார்த்துக்கொள்வதற்கு. இப்போது விலங்குகள் பற்றி யோசித்துப் பாருங்கள்...
தன்னுடைய பிறந்தநாளையொட்டி நடிகை அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் விலங்குகளுக்கான காப்பகம் ஒன்றை அமைக்கவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
மனிதராகப் பிறந்ததற்கு நாம் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். பேசுவதற்கு நமக்குக் குரல் இருக்கிறது. அடிப்படை உரிமைகள் நமக்கு உள்ளன. நீதி கேட்கலாம். நமக்கு குடும்பம், நெருங்கிய நட்புகள் உண்டு, நம்மைப் பார்த்துக்கொள்வதற்கு. இப்போது விலங்குகள் பற்றி யோசித்துப் பாருங்கள்.
அவை எப்படி வாழ்கின்றன? எப்படி நடத்தப்படுகின்றன? உரிமைகளை எண்ணிப் பாருங்கள். விலங்குகள் நியாயமாக நடத்தப்படுகின்றனவா? மோசமாக நடத்தினாலும் அவற்றால் எதுவும் செய்யமுடியாது. மனிதர்களாகிய நாம் தான் விலங்குகள் மீது பரிவு காட்டவேண்டும். ஆதரவளிக்கவேண்டும். இது நம் பொறுப்பு. பலமான உயிரினத்தின் முக்கிய பொறுப்பே, நம்மைவிடக் குறைந்த பலமுடைய உயிரினத்தைக் கவனித்துக்கொள்வதுதான்.
தலால் லாமா அவர்கள் என்னிடம் சொன்னதை மறக்கவே முடியாது. மனிதனைப் போலவே பேசமுடியாத உயிரினங்களுக்கும் வாழ்க்கை முக்கியமானதுதான். எப்படி மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்து, வேதனைகளுக்குப் பயந்து, இறப்பதற்குப் பதிலாக வாழ விரும்புகிறானோ அதுபோலதான் இதர உயிரினங்களும் வாழ ஆசைப்படுகின்றன என்றார்.
என்னுடைய பிறந்தநாளன்று என்னுடைய சக உயிரினத்துக்குச் உரிமை, பாதுகாப்பு, அன்பு போன்றவற்றைத் தரும் ஒரு காரியத்தில் ஈடுபடவுள்ளேன்.
மும்பைக்கு வெளியே விலங்குகளுக்கான காப்பகம் ஒன்றை அமைத்து வருகிறேன். வழியில் விடப்பட்ட விலங்குகள், மோசமான சூழலில் உள்ள விலங்குகளுக்கான இல்லமாக அது இருக்கும். அங்கு விலங்குகள் பாதுகாக்கப்படும். அன்பு செலுத்தப்படும். வளர்க்கப்படும்.
இது என் பலநாள் கனவு. தற்போது நனவாகியுள்ளது. என் சக உயிரினம் பாதுகாப்பாக வாழ்வதற்காக விரைவில் உங்களுடைய நேரத்தையும் ஆதரவையும் அறிவுரைகளையும் நான் கோருவேன். அதுவரை உங்களுடைய வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.