செய்திகள்

'ஷ்ஷ்ர்ர்ரூவ்வ்வ்’எப்போதோ நடித்ததற்கு இப்போது கிடைத்திருக்கும் ஆரவாரப் புகழ்! நடிகர் கரண் நெகிழ்ச்சி பேட்டி!

உமாகல்யாணி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கரண், தனது 40 ஆண்டு கால திரை வாழ்க்கையில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்மையில் அவர் புகைப்படத்துடன் 'ஷ்ஷ்ர்ர்ரூவ்வ்வ்’ என்ற ஒலிக்குறிப்புடன் மீம்ஸ் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த நடிகர் கரண், தற்போது இந்த மீம்ஸ்களால் மீண்டும் பிரபலமாகியிருக்கிறார். இந்தப் புகழால் ரசிகர்களுக்கு நன்றி கூறிய அவர், உற்சாகத்துடன் மீண்டும் திரையில் தோன்ற முடிவெடுத்துள்ளார். 

1996-ம் ஆண்டு வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை படக்காட்சி ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது.

கரணிசம், கரண் ஆர்மி, முரட்டு கரணியன்ஸ், அடங்காத கரண் ரசிகர்கள் என்று ரசிகர்களின் அன்பில் வைரலாகி இருக்கிறார் கரண். இந்த திடீர் புகழ் குறித்து சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் பேட்டியளித்த போது கூறியது, 'ரசிகர்களின் அன்புக்கு எவ்வகையில் கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை. என் மனைவிதான் ட்விட்டரில் என்னை பற்றி வரும் செய்திகளையும் பின்னூட்டங்களைப் பற்றியும் என்னிடம் தெரிவிக்கிறார். நான் சினிமாவிலிருந்து ஒதுங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. அதற்குப் பிறகும் ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைக்கவே சந்தோஷமாக உள்ளது. இதற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் இதையெல்லாம் முதலில் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்புதான் ரசிகர்கள் உண்மையாகவே என்னை பற்றி ட்விட்டரில் பதிவிடுகிறார்கள் என்பதை பார்த்தேன். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னால், சென்னையில் இருக்கும் ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றிருந்தேன். நான் உள்ளே நுழைந்ததுமே அங்கிருந்தவர்கள் என்னைச் சூழ்ந்து, என் பெயரைச் சொல்லி அழைத்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதன் பின் என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். இனி நான் ரசிகர்களுக்காக நல்ல படங்களில் நடிப்பேன். அவர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ அதை நிச்சயம் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன்.

மேலும் அவர் கூறுகையில், ‘இது வரை என்னை இயக்கிய அத்தனை இயக்குநர்களுக்கும் மிகவும் கடமைபட்டிருக்கிறேன். எனக்கான சுதந்திரத்தை அளித்தார்கள். அதிலும் கோகுலத்தில் சீதை படத்தில் இயக்குநர் அகத்தியன் என் காரெக்டரின் பெயரை ஐசி மோகன் (IC Mohan) என்று வைத்திருப்பார். ஆங்கிலத்தில், inferiority complex என்பதன் சுருக்கமாக IC என்பதை அடைமொழியாக அந்த காரெக்டருக்கு வைத்திருப்பார். அது ரசிகர்களை ஈர்த்தது. அது போல காதல் மன்னன் படத்தில் கார் ரேஸராக நடித்திருப்பேன். அதுவும் ஒரு வித்யாசமான காரெக்டர். இப்படி இயக்குநர்கள்கள் தான் என்னை செதுக்கியவர்கள். எனக்கென்று எந்த இமேஜும் இல்லை, ஆனால் இமேஜே இல்லையென்றும் சொல்லிவிட முடியாது. இனி தேர்ந்தெடுத்து நல்ல ரோல்களில் நடிப்பதாக முடிவு செய்துள்ளேன். என்னுடைய அடுத்த படம் அப்படிப்பட்ட படமாக இருக்கும். முதலில் வில்லனாக நடித்து பின்பு ஹீரோவாக ஆனேன். அதன் பிறகு குணசித்திர வேடங்களிலும் நடித்தேன். இப்போது மக்களின் ஆதரவுடன் மீண்டும் நல்ல நடிகனாக வருவேன். சமீபத்தில் ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும்’ என்று மகிழ்ச்சியுடன் தனது மனதில் உள்ளவற்றை பகிர்ந்து கொண்டார் கரண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT