செய்திகள்

நிறுத்தப்பட்ட ‘இம்சை அரசன்’ படப்பிடிப்பு: வடிவேலுவுக்கு ரெட் கார்டு?

தயாரிப்பு நிறுவனம் சார்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது...

எழில்

இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்து, சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த படம் "இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி'.  பெரும் வெற்றி பெற்ற இப்படம், வடிவேலுக்கு மிகப் பெரும் மைல் கல்லாகவும் அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், "இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' என்ற பெயரில் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஷங்கர் - சிம்புதேவன் - வடிவேலு என அதே கூட்டணி இதில் இணைந்தது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. வடிவேலு பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வடிவேலுவுக்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்து விட்டார் வடிவேலு.  படத்திற்கான அரங்குகள் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு இருந்ததால் பிரச்னை தயாரிப்பாளர் சங்கம் வசம் சென்றது. 

இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் சார்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. வடிவேலு முறைப்படி படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராததால் சுமார் ரூ. 9 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதனை அவரிடமிருந்து சங்கம் திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்மீது இருதரப்பிலும் கருத்து கேட்டு பிரச்னைக்கு முடிவு காண முயன்றனர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. 

இந்நிலையில் படப்பிடிப்பில் எவ்வித நிபந்தனையின்றி வடிவேலு கலந்துகொள்ளவேண்டும். அல்லது படப்பிடிப்புக்காக இதுவரை செலவழித்த தொகை, சம்பளத் தொகை ஆகியவற்றை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று திரைப்படச் சங்கங்கள் சார்பாக வடிவேலுக்குத் தகவல் சொல்லப்பட்டது.  ஆனால் வடிவேலு இந்த முடிவை ஏற்கவில்லை. 

படப்பிடிப்பு தொடங்க தாமதமானது. பிறகு என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரைத் தயாரிப்பு நிறுவனம் நீக்கியது. ஒப்பந்தக் காலம் முடிந்து ஒரு வருடம் கழித்து புகார் தரப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணத்தால் 2016, 2017-ம் ஆண்டுகளில் என்னால் வேறு படங்களில் நடிக்கமுடியாமல் போனது. இதனால் எனக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. எனவே இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் மேற்கொண்டு நடிக்க நாள்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்று தன்னுடைய நிலையைக் கடிதமாக எழுதி தயாரிப்பாளர் சங்கத்துக்கு அளித்தார் வடிவேலு.

இதையடுத்து இந்தப் பிரச்னைக்கு முடிவு எட்டப்படாததால், வடிவேலுவை யாரும், எந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் இதர தயாரிப்பாளர்களுக்குக் கூறியுள்ளதாக அறியப்படுகிறது. ரெட் கார்டு போடப்பட்டதால் தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடிக்க முடியாத சிக்கல் வடிவேலுவுக்கு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் காயம்

டிராக்டா் மோதியதில் பெண் காயம்

காலனியாதிக்க கொள்கை

விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது

தேவகோட்டை அருகே மது போதையில் நண்பரை கொலை செய்ததாக 4 போ் கைது

SCROLL FOR NEXT