செய்திகள்

நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த குறும்படம்! (காணொளி)

மணிகண்டன் தியாகராஜன்

ஜெயம், தனி ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ராஜாவிடம் வேலைக்காரன் படத்தில் அசோசியேட் இயக்குநராக பணி புரிந்த என்.நாகசுதர்ஷன் இயக்கியுள்ள குறும்படம் 'சிறிய இடைவேளைக்குப் பின்'.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் முன்னணி நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் நடித்துள்ளதாலேயே யூ-டியூப் தளத்தில் இளைஞர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் கதை என்ன? காதலர்களுக்கு இடையே நிகழும் உரையாடலுக்கு நடுவில் திடீரென ஏற்படும் சண்டையின் முடிவில் இருவருக்கும் இடையே நிகழும் பிரிவுதான் கதை.

ஒரு ரெஸ்டாரண்டில் சதீஷும் (கதாபாத்திரத்தின் பெயரும் சதீஷ் தான்), குறும்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்துவரும் ஹரிணி ரமேஷ்கிருஷ்ணனும் (கதையில் மீரா) சந்திக்கின்றனர்.

சதீஷ் வீட்டைப் பொறுத்தவரை காதல் திருமணத்துக்கு பச்சைக் கொடி. ஆனால், மீராவின் வீட்டில் எதிர்ப்பு. மீராவின் தந்தையிடம் பேசி சம்மதிக்க வைப்பதற்காகவே ரெஸ்டாரண்டில் சந்திப்பு.

தந்தை வர காலதாமதமாகவே தனது தந்தையைப் போல் நடித்து காதலனிடம் சில கேள்விகளைக் கேட்கிறார் மீரா.

அந்தக் கேள்விகளின் முடிவில் என்ன நிகழ்கிறது என்பதை சுவாரசியமான வசனங்கள் மட்டும், திரைக்கதையின் மூலம் ரசிகர்களுக்கு புதுவித திரை அனுபவத்தை தருகிறார் இயக்குநர் நாகசுதர்ஷன்.

தனது தந்தை போன்று நடிக்கும் காட்சிகளிலும், திடீரென காதலியாக மாறி அன்பில் உருகும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சதீஷ் போன்ற முன்னணி நடிகருடன் நடிக்கும்போது எந்தவித பதற்றமும் இன்றி இயல்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார் ஹரிணி. அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

சாக்லெட் பாயாக கலக்குகிறார் சதீஷ். மாப்பிளை பார்த்தது குறித்து ஹரிணி பேசும்போது எரிச்சலடைவதும், காதலியிடம் திருப்பி கேள்விக் கேட்கும் பொழுதும் அழகான ரியாக்சன் கொடுத்து கவர்கிறார் சதீஷ்.

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பாம்பு சட்டை படத்தில் அழகான பாடல்களை கம்போஸ் செய்து கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் அஜேஷ். இந்தக் குறும்படத்துக்கு காட்சிகளுக்கு ஏற்றவாறு சிறப்பான இசையை அவர் அளித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உதவியாளராக இருந்த கார்த்திக், இந்தப் படத்துக்கு சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷின் ஆடை வடிவமைப்பும் ரசிக்க வைக்கிறது. 15 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் இந்தக் குறும்படம் சிறந்த பொழுதுபோக்காக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

காதலர்களுக்குள் சண்டை நிகழ்வது சகஜம்தான். பிரேக் அப் சொல்லிவிட்டு மறுதினமே இருவரும் பேசிக் கொள்வதும் இயல்பாக நடக்கும் ஒன்றே. அதை குறிப்பிடும் விதமாக இந்தப் படத்தின் இறுதிக்காட்சி ஓபன் எண்டாக முடிகிறது. 'சிறிய இடைவேளைக்குப் பின்' மீண்டும் காதலர்கள் ஒன்று சேரவும் வாய்ப்புள்ளதல்லவா? இதன் தொடர்ச்சி வந்தாலும் நன்றாகவே இருக்கும்.

இந்தக் குறும்படத்தின் இயக்குநர் நாகசுதர்ஷன் கூறுகையில், 'இந்தக் கதையை கேட்ட சதீஷ் தாமாக முன்வந்து ஆர்வத்துடன் நடித்துக் கொடுத்தார்.

வெள்ளித்திரையில் தடம் பதிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதற்காக ஒரு கதையை தயார் செய்து கொண்டிருக்கிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT