பிளாஸ்டிக் பொருள்களை இனி கண்டிப்பாகப் பயன்படுத்த மாட்டேன்: இயக்குநர் சேரன்
இந்தத் திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தமிழக அரசை மனதாரப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்...
தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதம் முன்னரே தடை விதிக்கப்படும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டு, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. ஆறுமாத காலம் முடிவடைந்த நிலையில் 13 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு 100 சதவீத தடை விதிக்கப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வகைகள் உள்ள நிலையில், 13 வகைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க முடியும்.
இந்நிலையில் தன் வாழ்வில் இனி பிளாஸ்டிக் பொருள்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்த மாட்டே என இயக்குநர் சேரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:
பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இது முக்கியமான, வரவேற்கத்தக்க திட்டம். நம் மண்ணைப் பாதுகாப்பது நம் கடமை. நம் மண்ணின் வளத்தைப் பாதுகாப்பது முக்கியமான விஷயங்களில் ஒன்று. நான் எனது வாழ்வில் பிளாஸ்டிக் பொருள்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பதன் மூலமாக இந்த மண்ணின் வளத்தைப் பாதுகாக்கலாம். இந்தத் திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் தமிழக அரசை மனதாரப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.