சென்னை: குடிபோதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியதாக பிரபல கோலிவுட் நடிகர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி. சின்ன தம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திர வேடங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பின்னர் நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன், ஏதோ செய்தாய் என்னை, தற்காப்பு, சிவலிங்கா, 7 நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் குடிபோதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்தியதாக சக்தி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சூளைமேடு பகுதியில் செவ்வாய் அதிகாலை மதுபோதையில் காரை ஓட்டி வந்த நடிகர் சக்தி, சாலையில் சென்றவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி சென்று அவரை பிடித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் போலீசாரிடமும் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் சக்தியிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.