பேச முடியாத கட் அவுட்டுக்கு ஊற்றுவதற்குப் பதிலாக, அண்டா அண்டாவாகப் பாலைக் காய்ச்சி வருகிற மக்களுக்குக் கொடுங்கள் என்று சிம்பு தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பேனர் வைக்கும்போது ஏற்பட்ட தகராறில் இறந்த ரசிகர் மதன் என்பவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக இன்று அவர்களை நேரில் சந்தித்தார் சிம்பு. அப்போது செய்தியாளர்களிடம் சிம்பு பேசியதாவது:
என்னுடைய ரசிகர் மதன், பிளெக்ஸ் பேனர் வைப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் இறந்துபோனார். அப்போது நான் ஊரில் இல்லை. அந்தப் பிரச்னையால் ஏற்பட்ட பாதிப்பு மனத்துக்குள் இருந்தது. ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நான் கூறினேன், பேனர் பிரச்னையால் என் ரசிகர் ஒருவர் இறந்துவிட்டார். அவர் எப்போதும் என்னுடைய கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வார். அதுபோல செய்யாதே என நான் கூப்பிட்டு அவரைக் கண்டிப்பேன். என் மேல் உள்ள அன்பினால்தான் செய்வார். அதனால் அன்று இவ்வாறு சொன்னேன், எனக்கு பிளெக்ஸ் பேனர் எதுவும் வேண்டாம். அப்படி ஒரு மாஸைக் காண்பிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றேன். எனினும் என்னுடைய வேண்டுகோள் மக்களிடம் சரியாகச் சென்று சேரவில்லை.
சரி, ஒரு படத்தின் வெளியீட்டின்போது சொன்னால்தான் அனைவரையும் போய்ச்சேரும் என்று சமீபத்தில் ஒரு விடியோவில், எனக்கு கட் அவுட், பேனர் எல்லாம் வேண்டாம். பாலாபிஷேகம் எதுவும் செய்யவேண்டாம். அதற்குப் பதிலாக அப்பா, அம்மாவுக்குப் புடைவையோ சட்டையோ எடுத்துக்கொடுங்கள் என்றேன். அதுவும் மக்களிடம் போய்ச் சேரவில்லை. நாம் நல்ல விஷயங்கள் சொல்லும்போது அது அனைவரிடமும் சென்று சேருவதில்லை. கஜா புயலின்போது கூட ஓர் யோசனை சொன்னேன். அப்போதுதான் யோசித்தேன், ஒரு விஷயத்தை எதிர்மறையாகச் சொல்லும்போதுதான் அனைவருக்கும் சென்றடைகிறது.
அதனால் நான்கு நாள் முன்பு ஒரு விடியோ வெளியிட்டு மீண்டும் ஒரு விடியோ வெளியிட்டேன். அந்த விடியோவில், இதுவரை இல்லாத அளவு ஃபிளெக்ஸ், பேனர் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை, அண்டாவில் பால் ஊற்றுங்கள் என்றேன். அன்றைக்கு விடியோ வெளியிட்டபோது பேசாதவர்கள் இந்த விடியோவுக்கு மட்டும் பேசுகிறார்கள். அந்த விடியோவை இன்னொருமுறை பாருங்கள். பாக்கெட்டில் இல்லை, அண்டாவில் ஊற்றுங்கள் என்று சொன்னேனே தவிர எனக்கு அபிஷேகம் செய்யுங்கள், என் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுங்கள் என்று சொல்லவில்லை. நான் மாற்றிப் பேசவில்லை. எல்லாவற்றையும் மாற்றவேண்டும் என்றுதான் பேசினேன். நான் சொன்னவிதம் தவறாக இருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். பேச முடியாத கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதற்குப் பதிலாக, அண்டா அண்டாவாகப் பாலைக் காய்ச்சி வருகிற மக்களுக்குக் கொடுங்கள், கஷ்டப்படுகிறவர்களுக்குக் கொடுங்கள் என்றுதான் கூறினேன். நான் என்றில்லை, நல்ல விஷயத்தை யார் சொன்னாலும் ஊடகங்கள் மக்களிடம் அதைக் கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.