செய்திகள்

விஜய் படங்களை மட்டும் இயக்குவது ஏன்?: இயக்குநர் அட்லியின் உருக்கமான பதில்!

எழில்

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. தீபாவளிக்கு வெளியாகிறது.

ரஹ்மான் இசையமைப்பில் பிகில் படத்தின் பாடல்கள் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டன. பிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லி பேசியதாவது:

தெறியை விடவும் மெர்சல் இரண்டு மடங்கு பெரிய படம் என்றால் மெர்சலை விடவும் பிகில் மூன்று மடங்கு பெரியது. கமர்ஷியல் படமா, விளையாட்டுப் படமா என்பதைத் தாண்டி உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்.  எழுத்து, இயக்கம் என இரண்டிலும் என்னுடைய சிறந்த படமாக பிகில் இருக்கும். விஜய் சார் வேறொரு மாஸ் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் பெண்களின் உரிமை குறித்த இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். படத்தில் நான் பெண்களைப் போற்றுவதற்குக் காரணம், பெண்கள் இல்லையென்றால் நாம் யாரும் இல்லை. என்னுடைய எல்லாப் படங்களின் கதைகளும் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டதுதான். ரஹ்மான் சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஆசைப்படுகிறேன். நயன்தாரா எனக்குச் சகோதரி போல. திரையில் கம்பீரமாகத் தோன்றுவார். 

நான் வேறு நடிகர்களின் படங்களையும் இயக்கவேண்டும் என்று விஜய் அண்ணா சொன்னார். ஆனால் நான் எந்தக் கதை எழுதினாலும் என் மனத்துக்குள் வருவது அவர் முகம் தான்.  மெர்சல் படத்துக்குப் பிறகு பெரிய வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் என்னுடைய லக்கி நடிகர் விஜய் அண்ணா தான். என் அண்ணனை விட்டு நான் எப்படி வெளியே போவேன்? அவர் இல்லையென்றால் என் வளர்ச்சி எல்லாம் ஒன்றும் இல்லை. 

ராஜா ராணி கதை படத்தின் கதையைச் சொன்னபோது அப்போது அணிந்திருந்த சட்டையை ராசி என எண்ணி, அதையே அணிந்துகொண்டு சென்று, தெறி படத்தின் கதையைச் சொன்னேன். ஆனால் அதன்பிறகு அது மிகவும் பழையதாகிவிட்டது. எனவே அண்ணனை நம்பி வேறு சட்டையை அணிந்து மெர்சல் படத்தின் கதையைச் சொன்னேன். அதற்கும் சம்மதம் கிடைத்தது. அப்போதுதான் புரிந்தது, எனக்கு ராசி, சட்டை கிடையாது, விஜய் அண்ணன் என்று. என் நிறம் குறித்து சமூகவலைத்தளங்களில் கிண்டல் செய்கிறார்கள். ஆங்கிலமும் ஹிந்தியும் மொழிகள் மட்டும்தான். அதுவே தகுதி அல்ல. அதுபோல கருப்பும் ஒரு நிறம் மட்டுமே. 

பிகில் படத்தின் டிரெய்லர் முடிவாகிவிட்டது. தணிக்கை வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அக்டோபர் முதல் வாரத்தில் டிரெய்லர் வெளியாகலாம் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT