செய்திகள்

இந்தியன் 2 விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துகிறது: உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் முறையீடு!

எழில்

இந்தியன் 2 விபத்து தொடர்பான வழக்கில் விசாரணை என்கிற பெயரில் காவல்துறை தன்னைத் துன்புறுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது.

நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி கிரேன் விழுந்து உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரம் சுந்தர்ராஜன் தெருவைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சொ.சந்திரன், சி.மது ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் 13 போ் காயமடைந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் உடனடியாக கைது செய்தனா்.

இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணையை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை பெருநகரகாவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து நசரத்பேட்டை போலீஸாா், வழக்கின் ஆவணங்களை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். வழக்கின் விசாரணை அதிகாரியாக துணை ஆணையா் ஜி.நாகஜோதி நியமிக்கப்பட்டாா். அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, விபத்து குறித்து புதிதாக ஒரு வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு பதிவு செய்தது. விபத்து ஏற்படும்போது சம்பவ இடத்தில் இருந்த 6 ஊழியா்களிடம் மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனா். மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையா் சி.ஈஸ்வர மூா்த்தி, துணை ஆணையா் நாகஜோதி ஆகியோா் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த நடிகா் கமல்ஹாசன், இயக்குநா் ஷங்கா் போன்றோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர்களுக்கு அழைப்பானை அனுப்பப்பட்டது.

இதையடுத்து கடந்த 27-ஆம் தேதி இயக்குநா் ஷங்கரிடமும், 3-ஆம் தேதி நடிகா் கமல்ஹாசனிடமும், 5-ஆம் தேதி லைகா நிா்வாகிகளிடமும் விசாரணை செய்தனா். சென்னை வேப்பேரியில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்கள். விபத்து நடந்தது குறித்தும் படப்பிடிப்புத் தளத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

விசாரணைக்குப் பிறகு கமல் பேட்டியளித்ததாவது: விபத்தில் அடிபடாமல் தப்பித்தவா்களின் நானும் ஒருவன். அதனால் நடந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை கூறுவது எனது கடமை. எங்கள் துறையில் இனி இதுபோன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க இனி நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலாகவே, இதை நான் பாா்க்கிறேன். இனி இதுபோன்று விபத்துகள் நடக்காமல் இருக்க காவல்துறையின் ஆலோசனையும் நாங்கள் கேட்டுள்ளோம் என்றாா்.

இந்த வழக்குத் தொடா்பாக விசாரணை செய்வதற்கு, சம்பவத்தின்போது அங்கிருந்த துணை நடிகா்கள், தொழில்நுட்ப கலைஞா்கள், செட் அமைத்தவா்கள் ஆகியோருக்கு மத்தியக் குற்றப்பிரிவு அண்மையில் அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையை ஏற்று துணை நடிகா்கள், தொழில்நுட்ப கலைஞா்கள், செட் அமைத்தாா்கள் என 15 போ் மத்தியக் குற்றப்பிரிவில் திங்கள்கிழமை ஆஜரானாா்கள். இவா்களிடம் துணை ஆணையா் நாகஜோதி தலைமையில் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா். அவா்கள் அனைவரும் அளித்த தகவல்கள் எழுத்து பூா்வமாகவும், விடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்தியன் 2 விபத்து வழக்கில் விசாரணை என்கிற பெயரில் தன்னை காவல்துறை தன்னை துன்புறுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் ஹாசன் முறையீடு செய்துள்ளார். சம்பவ இடத்தில் விபத்து பற்றி நடித்துக்காட்டும்படி காவல்துறை வற்புறுத்துவதாக தனது மனுவில் கமல் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT