46 நாள்களில் த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு நிறைவு: துபைக்குப் பறந்தார் மோகன் லால்
56 நாள்களில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட நிலையில் 10 நாள்களுக்கு முன்பே...
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ல் வெளியான படம் த்ரிஷ்யம்.
கேரளாவில் மகத்தான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்கிற பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது.
மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 உருவாகியுள்ளது. ரூ. 50 கோடி வசூலைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்கிற பெருமை த்ரிஷ்யம் படத்துக்கு உண்டு. இதனால் இதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
மோகன் லால், த்ரிஷா நடிப்பில் ராம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தபோது இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. த்ரிஷ்யம் 2 பணிகள் முடிவடைந்த பிறகு ராம் படப்பிடிப்பை ஜீத்து ஜோசப் தொடங்கவுள்ளார்.
இந்நிலையில் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி 46 நாள்களில் த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் 56 நாள்களில் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட நிலையில் 10 நாள்களுக்கு முன்பே படப்பிடிப்பை முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். த்ரிஷ்யம் 2 படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து, தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் பங்கேற்ற மோகன்லால், ஓய்வுக்காக துபைக்குப் பறந்துள்ளார்.